
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இடம்பெற்ற கார்க் குண்டுத் தாக்குதல் ஒன்றில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரின் காபூல் காசிம் தெருவில் உள்ள உள்துறை அமைச்சுக்கு அருகில் இன்று (புதன்கிழமை) காலை குண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்றை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மேலும் 10 பேர் வரை படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.
ஆப்கான் அரச படைகளுக்கு எதிராக அவர்கள் அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.