கிரிக்கெட் ஊழலை தடுக்க புதிய சட்டம்.

இலங்கையில், விளையாட்டுக்களில் காணப்படும் ஊழல் மோசடிகளை தடுக்கும் வகையிலான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசேட கூட்டத்தொடர் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

விளையாட்டுக்களில் ஆட்ட நிர்ணயம், ஊழல், சட்டவிரோதமான சூழ்ச்சித் திறனுடன் கையாளுதல் மற்றும் சட்ட விரோதமான பந்தயம் பிடித்தல் தொடர்பான தவறுகளில் குற்றவாளிகளாக இனங்காணப்படும் நபர்களுக்கு 100 மில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்காத வகையில் தண்டப்பணம் அல்லது 10 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகள் என்பன இந்த சட்டமூலத்தில் உள்ளடங்குகின்றன.

இந்த சட்டமூலத்தின் 11வது பிரிவின் 1ஆம் பந்தியில் விளையாட்டுக்களில் ஆட்ட நிர்ணயம், ஊழல், சட்டவிரோதமான சூழ்ச்சித் திறனுடன் கையாளுதல் மற்றும் சட்ட விரோதமான பந்தயம் பிடித்தல் போன்ற குற்றங்கள் எவை என்பது தொடர்பில் வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வேறு குற்றங்களாக தகவல்களை வெளியிடுதல், விசாரணையொன்று தொடர்பில் ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் தனிநபர் குழுவொன்றினால் செய்யப்படும் தவறு என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி இந்த சட்டத்தின் கீழ் எதாவது தவறு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வர்த்தமானியில் வெளியிடப்படும் ஒழுங்குவிதிக்கு அமைய, பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சரினால் தீர்மானிக்கப்படும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் பதவிக்குக் குறையாத பதவி அந்தஸ்து கொண்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட, சுயாதீன விசேட விசாரணை அலகொன்று நிறுவப்படும். அதேபோன்று, இந்த சட்டத்திற்கு அமைய விளையாட்டு கழகங்களின் வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்தும் போது வாக்களிக்க தகுதியுடைய உறுப்பினர்களின் பட்டியலொன்றை குறித்த கூட்டத்தை கூட்டுவதற்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னர் அதன் துணை நிறுவனங்களுக்கு வழங்கவேண்டும்.

அத்துடன், கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கு அறிக்கையொன்றை குறிப்பிட்ட தலைவர், செயலாளர் மற்றும் பொருளலாளர் அகியோரினால் அத்தாட்சிப்படுத்தி அதன் பிரதிகள் அதன் துணை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும், கணக்காய்வாளர் நாயகத்தால் கணக்காய்வு செய்யப்படும் கணக்கறிக்கை இறுதி கணக்கறிக்கையாக கருதப்படும் எனவும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுப்பதற்கு சட்டம் எதுவும் இருக்கவில்லை என்பதுடன் அண்மைக்காலமாக சர்வதேச கிரிக்கட் சபை விசாரணையாளர்களால் விசாரணை மேற்கொள்ள காரணமான ஆட்ட நிர்ணயம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பின்புலங்களுக்கு எதிராக இந்த செயன்முறையை துரிதப்படுத்தும் நோக்கில் விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளுக்கு எதிரான சட்டமொன்றை கொண்டுவரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கவிளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுக்கும் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பரபரப்பான குற்றச்சாட்டடொன்றை முன்வைத்தார்.

அதாவது, 2009ஆம் ஆண்டு இந்தியாவுடனான கிரிக்கெட் தொடர் நடத்தும் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக 15 மில்லியன் டொலர்கள் நிதி வரவேண்டியிருந்த போதும் வெறுமனே 3 மில்லியன் டொலர்கள் மட்டுமே இலங்கை கிரிக்கெட் சபைக்கு கிடைத்தது என்றும் ஏனைய பணத்தொகை என்னவானது என்பது தொடர்பாக கண்டறிய விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த காலங்களில் கிரிக்கெட் சபையில் தன்வசப்படுத்திக் கொண்ட சிலர் இலங்கை கிரிக்கெட் சபைக்கு வரவேண்டிய பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதனால் இலங்கை கிரிக்கெட் சபையும் வீரர்களுமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய தொடரொன்று இடம்பெற்ற போது சில தவறுகள் இடம்பெற்றுள்ளன. அப்போது கிரிக்கெட் சபையில் இருந்து என்னை நீக்கிவிட்டு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அவ்விடத்தில் நியமிக்கப்பட்டார்.அதன் பின்னரே இந்திய சுற்றுபயணம் நடத்தப்பட்டது. இந்த தொடரில் அதிகளவிலான தொகை எமக்கு இல்லமால் போனது.

இந்தத் தொடரில் குறைந்த பட்சம் 14 முதல் 15 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வரவேண்டும். ஆனால் இந்த தொடர் குறித்த உடன்படிக்கையில் எமக்கு 6.6 மில்லியன் டொலர்கள் என்ற உடன்படிக்கை செய்யப்பட்டது.

ஆனால் கிடைத்தது 3 மில்லியன் டொலர்கள் மட்டுமேயாகும். ஏனைய தொகை என்னவானது, இதனை யார் கையாண்டது என்ற இந்த ஊழல்கள் அனைத்தையும் தேடிப்பார்க்க வேண்டும். கிரிக்கெட் சபைக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இது தனிப்பட்ட ஒரு சிலறின் தேவைக்காக செய்யப்பட்ட ஊழலாகும்.

இதுவரை காலமாக விளையாட்டுத்துறை அமைச்சர்கள் செயற்பட்டும் குற்றவாளிகள் பலர் குறித்து தெரிந்தும் எவரும் சட்டம் ஒன்று கொண்டுவந்து குற்றவாளிகளை தண்டிக்க முன்வரவில்லை’ என கூறினார்.


Recommended For You

About the Author: ஈழவன்