மக்களுக்கு ராஜபக்சவினர் மீதான பயம் அப்படியே உள்ளது-அனுர!!

ராஜபக்ஷக்கள் மீதான பயம் இன்றும் மக்களிடம் உள்ளது.எனினும் கடந்த முறை ராஜபக்ஷக்களை தோற்கடித்தவர்கள் மீண்டும் ராஜபக் ஷக்களையே பாதுகாத்தனர்.

அதனால் தான் இன்று மீண்டும் ராஜபக்ஷக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் உருவாக்கியுள்ளது.

ராஜபக்ஷக்களை தோற்கடிப்பதுடன் சேர்த்து விக்ரமசிங்கவையும் தோற்கடிக்க வேண்டும் என்பதே எமது நோக்கம் என்கிறார் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக.

நாம் தனியாக களமிறங்கியுள்ளமையால் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் இன்றுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் தேர்தல் நிலவரம் குறித்தும் தேசிய மக்கள் சக்தியின் நகர்வுகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் இதன்போது மேலும் கூறியதானது,

அரசியல் கலாசாரத்தில் மக்கள் பின்னடைவில் உள்ளனர் என்பதே உண்மையாகும். பிரதான இரு அணிகளின் அரசியல் மேடைகளில் ஒருவருக்கு ஒருவர் அவமதிப்பு, கேவலப்படுத்தல், மோதல்களை ஏற்படுத்தும் அரசியலை செய்கின்றனர்.

இந்த கூட்டங்களை ஆதரிக்கும் மக்கள் உள்ளனர். யாரை விமர்சிக்கின்றோம் என்று தெரியாது விமர்சிக்கும் மக்கள் உள்ளனர். தம்மை தாமே விமர்சிக்கும் வேலைகளிலும் மக்கள் ஆதரவு தெரிவிக்கும் கேலிக் கூத்துக்கள் இடம்பெற்றுவது இம்முறை தேர்தல் மேடைகளில் பார்க்க முடிந்துள்ளது.

எனினும் எம்முடன் உள்ள மக்கள் அவ்வாறு அல்ல. அவர்கள் அமைதியாக சிந்தித்து செயற்படும் தன்மைகள் உள்ளது. எனினும் நாம் மாற்றம் ஒன்றினை உருவாக்கவே களமிறக்கியுள்ளோம்.

நாம் ஆட்சிக்கு வந்தால் செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அரசாங்கமாக தீர்மானம் எடுக்கும் வேளையில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு செயற்படும்.

எனினும் அமைச்சரவை ஒன்றை உருவாக்கி அதில் நாம் தீர்மானம் எடுக்க வேண்டும். அவை குறித்தெல்லாம் சரியான திட்டங்களை வகுத்துள்ளோம். அதேபோல் மக்கள் சொத்துக்களை களவெடுத்த கள்ளர்களிடம் இருந்து மக்களுக்கு அவர்களின் சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொடுப்பதே எமது முதல் பணியாக உள்ளது. அதேபோல் மக்களுக்கு முதலில் சலுகைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்ததுடன் ஆட்சியாளர்கள் எவ்வளவு சொத்துக்களை சுருட்டிக்கொள்ளலாம் என முயற்சிக்கும் கலாசாரத்தை நாம் முற்றாக நிறுத்துவோம்.

சுகபோக வாழ்கையை நாம் வாழ முன்னர் எம்மை ஆதரிக்கும் எமது மக்களுக்கு அதே வாழ்கையை கொடுக்க வேண்டும். எமது மக்கள் முகங்களில் மகிழ்ச்சியை பார்க்கவே நாம் விரும்புகின்றோம். மாறாக கோவங்கள், குரோதங்கள், வெறுப்பு, இனவாதம் மதவாதம் மூலம் அரசியல் செய்ய நாம் ஒருபோதும் தயாரில்லை. இப்போது வரையில் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டுமே தவிர பிரச்சினைகளை மேலும் பிரச்சினையாக்க நாம் தயாரில்லை என்றும் கூறலாம்.

எமது நாட்டில் இன்றைய அரசியல் கலாசாரம் அரசியலை தாண்டி கலாசார மோதலாக அல்லது மத இன மோதலாக மாறிவிட்டது. இதனை மாற்ற வேண்டும் என்ற முயற்சிகளை எடுத்துள்ளோம். மக்களின் மனங்களை மாற்ற வேண்டும். இது முரண்பாட்டு வாதங்களினால் ஒருபோதும் முடியாது.

இந்த நாட்டில் ராஜபக்ஷக்கள் மீதான பயம் இன்றும் நாட்டில் உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜபக்ஷக்களை தோற்கடிக்க வேண்டும் என வந்து அவர்களை தோற்கடித்தவர்கள் மீண்டும் ராஜபக்ஷக்களையே பாதுகாத்தனர்.

இன்று மீண்டும் ராஜபக்ஷக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் உள்ளது.

அதனுடன் சேர்த்து விக்ரமசிங்கவையும் தோற்கடிக்க வேண்டும் என்ற போராட்டத்தை நாம் கையில் எடுத்துள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ராஜபக்ஷக்களை ஐக்கிய தேசிய கட்சியினர் எவ்வாறு பாதுகாத்தனர் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.

நாம் தனியாக களமிறங்கியுள்ளமையால் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே. ஆனால் நாம் இரண்டு தரப்பில் எவரையும் நம்பத் தயாரில்லை. புதிய அணியாக எம்மை நாம் வெளிபடுத்த வேண்டும் என்றார்.


Recommended For You

About the Author: Editor