அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு!!

அயோத்தியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை பூர்ணிமா விழாவை முன்னிட்டு வரலாறு காணாத பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ஆண்டுதோறும் கார்த்திகை பூர்ணிமா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும். இதையொட்டி அங்குள்ள சரயு நதியில் இலட்சக்கணக்கானோர் புனித நீராடி செல்வர்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை பூர்ணிமா கொண்டாட்டங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகின்றன. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் இருந்தே சரயு நதியில் மக்கள் புனித நீராடி வருகின்றனர்.

அங்குள்ள சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 9ஆம் திகதி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அயோத்தியில் ஏற்கனவே தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

தற்போது கார்த்திகை பூர்ணிமா புனித நீராடல் நிகழ்வுகளும் நடைபெற்று வருவதால் அங்கு பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அயோத்திக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக அயோத்தி முழுவதும் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தி வழக்கு தீர்ப்புக்குப் பின்னர் கொண்டாடப்படும் முதல் கார்த்திகை பூர்ணிமா என்பதால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor