பிணையில் வெளியே வரும் பேரறிவாளன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஏழுபேரில் ஒருவரான பேரறிவாளன் நாளை சிறையிலிருந்து இரண்டாம் முறையாக ஒரு மாத பிணையில் விடுவிக்கப்படவுள்ளார்.

பேரறிவாளன் தந்தை உடல் நலம் சரியில்லாததாலும், அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அவரது தாய் அற்புதம்மாள் பிணை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

அதையேற்ற சிறைச்சாலைகள் திணைக்களம் ஒரு மாதம் பிணை வழங்கியுள்ளது. இதையடுத்து நாளை பிற்பகல் 2 மணியளவில் பேரறிவாளன் பிணையில் விடுவிக்கப்படுகின்றார்.

பொலிஸ் பாதுகாப்புடன் ஒரு மாதம் பிணையில் செல்லும் பேரறிவாளன் விதிகளுக்கு அப்பாற்பட்டு எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என சிறைச்சாலைகள் திணைக்களம் நிபந்தனை விதித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மனிதகுண்டு வெடிப்பு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்