தரையில் படுத்து தூங்கிய முதல்வர் குமாரசாமி!

கர்நாடக முதல்வர் குமாரசாமி கிராம வஸ்தவா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதில் அவர் ஒவ்வொரு கிராமங்களுக்கு சென்று அங்கு தங்கி மக்களிடம் குறைகளை கேட்கிறார்.

மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன்படி அவர் யாத்திர் மாவட்டத்தில் உள்ள குர்மிட்கல் கிராமத்துக்கு சென்று தங்கினார்.

முன்னதாக அவர் தனக்கு எந்தவிதமான சொகுசு வசதிகளையும் செய்ய கூடாது என்றும் தங்குவதற்கு சாதாரணமான அறையே போதும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து அவருக்கு சிறிய அறை தயார் செய்யப்பட்டது. அங்கு இரவு தங்கிய குமாரசாமி தரையில் போர்வையை விரித்து படுத்து தூங்கினார்.

இது தொடர்பாக அவர் சந்தரகி கிராமத்தில் நிருபர்களிடம் கூறும்போது, எதற்காக 5 ஸ்டார் ஓட்டல் போன்ற வசதிகளுடன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நான் சாலையில் கூட படுத்து தூங்க தயாராக இருக்கிறேன்.

சாதாரணமாக இந்த வசதிகளை கூட நான் ஏற்கவில்லை என்றால் தினமும் எப்படி மக்களுக்காக நான் உழைக்க முடியும்.

நான் கிராமத்துக்கு சாதாரண பஸ்சில்தான் வந்தேன். வால்வோ பஸ்சில் வரவில்லை. நான் எதையும் பா.ஜனதாவிடம் இருந்து கற்று கொள்ள தேவையில்லை.

சொகுசு ஓட்டலில் படுத்து தூங்கி இருக்கிறேன். நான் தந்தை தேவேகவுடா பிரதமராக இருந்த போது ரஷியாவில் உள்ள கிராண்ட் கிரிம்சின் மாளிகையில் படுத்து தூங்கி இருக்கிறேன். என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்து இருக்கிறேன். எனது சில நண்பர்கள் என்னிடம் கூறும்போது, ஏன் கிராமங்களில் தங்கும் நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள், என்று கேட்டனர்.

எனக்கு களப்பணிதான் முக்கியம். எதிர்க்கட்சியினர்தான் மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபடுகிறார்கள். அது போன்று நான் செய்ய மாட்டேன் என்றார்.

குமாரசாமி கிராமங்களுக்கு சென்று தங்கும் நிகழ்ச்சியின் போது, சொகுசு வசதிகள் தயார் செய்யப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி இருந்தனர்.


Recommended For You

About the Author: Editor