திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது தோல்வியா?

எமா வாட்சன்… ஆங்கில திரைப்படங்கள் பார்ப்பவர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லை என்றாலும் அவரை பற்றி தெரியாதவர்களுக்காக, இங்கிலாந்தை சேர்ந்த நடிகையான இவர், ஹாரிபாட்டர் படத்தொடர்களில் முதன்மை நாயகியாக தனது 10 வயதில் அறிமுகமாகி தற்போது பல படங்களில் முன்ணனி நடிகையாக வலம் வருபவர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் நல்லெண்ண தூதுவராக இருக்கும் இவர் பெண்களிடம், அரசியலில் பெண்கள் பங்கேற்பதன் முக்கியத்துவம், ஆண்களுக்கும் பெண்களுக்குமான சம உரிமை குறித்து தொடர்ந்து பேசி வருகிறார், இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளார்.

அடுத்த ஆண்டு 30 வயதை எட்டும் எமா வாட்சன், இங்கிலாந்தின் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில், 30 வயதிலும் வாழ்க்கைத் துணை இல்லாமல் (single) இருக்கும் நிலை பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, Single என்னும் சொல் கொண்டு அழைக்கப்படுவதை விட Self-partnered என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன் என சுவாரசியமான பதிலை சொல்லியிருக்கிறார்.

வாழ்க்கைத் துணை இல்லாமல் என்று கூறும்போது, வாழ்க்கை துணையை தேடிக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிம்பம் தோன்றுகிறது, ஆனால் அவர் , தான் இருக்கும் நிலையிலேயே மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வாழ்க்கைத் துணைக்காக காத்திருக்கவில்லை என்பதை குறிக்கவே Self-partner என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்.

இந்த பதில் வெளியானதிலிருந்து சமூக வலைகளில் பெண்கள், ஆண்கள் வேறுபாடின்றி பல இளைஞர்களை கவர்ந்துள்ளது.

ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், BAFTA விருது வாங்கிய, ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் நல்லெண்ண தூதுவராக உள்ள பெண்ணுக்கே வாழ்க்கை துணை இல்லையென்றால் அவர் வாழ்வில் தோல்வி அடைந்தவர்போல பரிதாபத்துடன் கேள்வி கேட்கப்படுகிறார் என்றால், சாதாரண பெண்களுக்கு வாழ்வில் தன் விருப்பத்தை தேர்ந்தெடுக்க உரிமை இல்லையா?

திருமணமும், வாழ்க்கை துணையும், குழந்தைகளும் தான் ஒருவரின் வாழ்வின் மகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணிகளா? இவை அனைத்தும் தேவைப்படாமல் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர்கள் வாழ்வில் தோற்றவர்களா?

ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பது இல்லை. அதுபோல வாழ்வில் அனைவருக்கும் தனித்தனி விருப்பு வெறுப்புகள் இருப்பது இயற்கையின் இயல்பு. ஒருவர் சரி என்று நினைக்கும் வட்டத்துக்குள் அனைவரும் வரவேண்டும் என நினைப்பதுதான் முதிர்ச்சியற்ற நிலை.

வாழ்வின் தோல்வி என்பது இந்த முதிர்ச்சியற்ற நிலையாகக்கூட இருக்கலாம். எனவே அடுத்தவர்களின் வாழ்வின் நீதிபதியாக இல்லாமல், தனிமனித விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து வாழ்வோம். மற்றவரையும் வாழ விடுவோம்.


Recommended For You

About the Author: Editor