நான் பாஜக சாயம் தான்- ரஜினிகாந்த்!!

என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இன்னும் சில மாதங்களில் அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் அவரை பாஜகவுக்கு கொண்டுவர அக்கட்சியின் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘ரஜினி பாஜகவில் இணைய வேண்டும்’ என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே ரஜினிக்கு மத்திய அரசு விருது அறிவித்ததும் அவரை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சியாக இருப்பதாக சில கட்சிகள் கருத்து தெரிவித்தன.

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இயக்குனர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் இன்று (நவம்பர் 8) ரஜினிகாந்த் கலந்துகொண்டார். பின்னர் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார்.

திருவள்ளுவருக்கு காவி துணி போர்த்தி அரசியல் செய்யப்படுகிறதே என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைக்க, அதற்கு ரஜினிகாந்த், “திருவள்ளுவர் ஒரு மிகப்பெரிய ஞானி, சித்தர். ஞானிகளையும் சித்தர்களையும் மத, சாதி எல்லைக்குள் அடக்கிவிட முடியாது.

திருவள்ளுவர் அதற்கு அப்பாற்பட்டவர். திருவள்ளுவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்துள்ளது. அவரது கோயிலை பார்த்தாலே அது தெரியும். அவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர். அதனை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவரை காவி உடையில் வெளியிட்டுள்ளது. ஆனால், ஊரிலுள்ள திருவள்ளுவர் சிலைகளில் காவி உடை அணிவிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை. நாட்டில் மக்களுக்கான பிரச்சினைகளும், அவர்களுக்கான தேவைகளும் எத்தனையோ இருக்க இதனை பெரிய விஷயமாக்குவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது” என்று கருத்து தெரிவித்தார்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்று தெரிவித்த ரஜினிகாந்திடம், ‘பொன்.ராதாகிருஷ்ணன் உங்களை வந்து சந்தித்துள்ளார்.

அவர் நீங்கள் பாஜகவில் இணைய வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக எதுவும் விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, “அப்படி எதுவும் விவாதிக்கப்படவில்லை.

பாஜகவில் இணைய வேண்டும் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. எனக்கு பாஜக சாயத்தை பூச முயற்சி செய்துவருகிறார்கள். திருவள்ளுவர் போல எனக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்டமாட்டேன்” என்று கூறி தனது ட்ரேட் மார்க் புன்னகையுடன் விடைபெற்றுக்கொண்டார்.

பின்னர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்திடம், தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என நினைக்கிறீர்களா என்று கேட்க, “தமிழகத்தில் இன்னும் சரியான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது” என்று அவர் பதிலளித்தார்.

மேலும், “திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்திவிட்டன. நான் எப்போதும் வெளிப்படையாக பேசுபவன். தொடர்ந்து படங்களில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து படங்களில் நடிப்பேன்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதிகாக்க வேண்டும். மிசாவில் ஸ்டாலின் கைதானது பற்றி எனக்குத் தெரியாது. தெரியாதது பற்றி கருத்து சொல்ல முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor