பாகிஸ்தான் அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது அவுஸ்ரேலியா

பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, அவுஸ்ரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, இப்தீகார் அஹமட் 45 ஓட்டங்களையும், இமாம் உல் ஹக் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில், கேன் ரிச்சட்சன் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் மற்றும் சீன் அபோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் அகர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 107 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 11.5 ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட்டும் இழப்பின்றி, வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது, டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களையும், ஆரோன் பின்ஞ் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சாளர் சீன் அபோட் தெரிவு செய்யப்பட்டார்.

ஏற்கனவே சொந்த மண்ணில் வைத்து இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்த அவுஸ்ரேலியா அணி, தற்போது சொந்த மண்ணில், பாகிஸ்தானையும் பதம் பார்த்துள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்