அமெரிக்கா செல்கிறார் எர்டோகன்!

துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப்பின் அழைப்பை ஏற்று அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ளார்.

இதன்படி நவம்பர் 13ஆம் திகதி வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பை எர்டோகன் சந்திக்கவுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் எர்டோகனுடன் நேற்று (புதன்கிழமை) தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினார். இதில் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

மேலும் துருக்கி – சிரிய எல்லையில் தற்போதைய நிலைவரம் குறித்து இரு தலைவர்களும் உரையாடினர். இந்த உரையாடலில், அமெரிக்காவுக்கு வருமாறு எர்டோகனுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக எர்டோகன் உறுதிப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

முன்னதாக, துருக்கி எல்லையை அண்மித்த சிரியாவில் குர்திஸ் போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி ஜனாதிபதி எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 இலட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

சிரியா மீதான தாக்குதல் காரணமாக உலக நாடுகள் துருக்கி மீது விமர்சனங்கள் எழுப்பியிருந்தன. துருக்கி மற்றும் குர்துப் படை இடையே 5 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. மேலும் துருக்கி மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையையும் திரும்பப் பெற்றது.


Recommended For You

About the Author: Editor