வல்வெட்டித்துறையில் வீடொன்று சுற்றிவளைப்பு.

வல்வெட்டித்துறை மக்கள் வங்கியின் முகாமையாளரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் முகாமையாளரின் வீட்டுக்குள் மறைந்திருப்பதாகத் தெரிவித்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.
தொண்டமனாறு அரசடிப் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை மக்கள் வங்கியின் முகாமையாளரின் வீடு இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் வவுனியா மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில்  முகாமையாளரின் வீட்டு வளவுக்குள் மதில் ஏறிப் பாய்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீட்டுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிவில் உடையில் இருந்தனர்.
11 பொலிஸ் உத்தியோகத்தர்களில் 6 பேர் வவுனியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 5 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தம்மை அடையாளப்படுத்தி உள்ளனர்.
எனினும் பொலிஸார் அத்துமீறி வீட்டு வளவுக்குள் வந்தனர் என்றும் வீட்டுகள் நுழைய அனுமதிக்கமாட்டேன் என்றும் வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மேலதிக பொலிஸார் அதிகாலை 4 மணிக்கு வருகை தந்து வீட்டை சுற்றிவளைத்தனர்.
வவுனியாவில் நேற்றுமுன்தினம் மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலை முன்னெடுத்தவர்கள் வீட்டுக்குள் மறைந்திருப்பதாகவும் அவர்கள் பயணித்த ஜீப் வாகனமும் அங்கு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு வடமராட்சிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இன்று காலை வருகை தந்தானர். அவரிடம் தனது வீட்டுக்குள் சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவுடன் வருமாறு வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதனால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு சென்றுள்ளார்.
வங்கி முகாமையாளரின் மனைவி ஆசிரியர். அவர் உள்பட வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
சம்பவத்தை அறிந்த ஊர் மக்கள் அங்கு கூடியுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்