முதன்முறையாக போராட்டத்தில் இறங்கிய போலீசார்!

வழக்கமாக எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதற்கு பாதுகாப்பு அளிப்பதும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதுமே காவல்துறையினர் பணியாகயிருக்கும்.
ஆனால், இன்று டெல்லியில் காவலர்களே போராட்டத்தில் இறங்கியிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் அண்மையில் கடுமையான மோதல் வெடித்தது. இச்சம்பவம் மிகப்பெரிய கலவரமாக மூண்டது. காவல்துறையினரும் வழக்கறிஞர்களும் மூர்க்கமாக தாக்கிக்கொண்டனர்.
காயம்பட்ட வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி. கார்க் நடத்தும் விசாரணை ஆறு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் வெடித்ததைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கறிஞர்கள் நேற்று(நவம்பர் 4) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே சமயம், பல்வேறு இடங்களில் இருதரப்பினருக்குமான மோதல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. வீடியோக்களில் பதிவான ஒரு சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இந்நிலையில், டெல்லியில் காவலர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கறிஞர்களுடனான மோதல் விவகாரத்தில் தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வெளியே சீருடையுடன் போலீஸார் திடீரென போரட்டத்தை தொடங்கினர்.
போலீசார் தங்கள் கைகளில் ‘காவலர்களை காப்பாற்றுங்கள்’, ‘காவலர்களுக்கு நீதி வேண்டும்’, ‘எங்களுக்காக அக்கறை கொள்வது யார்’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு நியாயம் வேண்டும் எனக் கூறி அவர்கள் முழுக்கங்களை எழுப்பினர்.
போலீஸார் திடீரென போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்துக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் போலீசாரை பணிக்குத் திரும்புமாறு வலியுறுத்தினார். மேலும், டில்லி காவல்துறை மூத்த அதிகாரிகள் போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
போலீசார் மீதான தாக்குதல் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகள் ஆராயப்படுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். இருப்பினும் காவலர்களின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது.
வக்கீல்களுடன் மோதலைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் நடத்திய போராட்டத்தை அடுத்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில் பைஜால் நிலைமையை மதிப்பாய்வு செய்து, வக்கீல்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான நம்பிக்கையை மீட்டெடுப்பது அவசியம் என்று கூறினார்.
தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு
போலீஸாரின் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலர்கள் சங்கம் வெளியிட்ட ஆதரவுக் கடிதத்தில், டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதாகவும்; இந்நிகழ்வு சட்டத்தின் மீதுள்ள மரியாதையை மதிக்காத போக்கைக் காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியில் போராடும் ஒவ்வொரு காக்கிச் சட்டை காவலர்களுக்கு தோள் கொடுத்து நிற்பதாகவும், சோதனையான இந்த காலகட்டத்தில் சட்டத்தை மீறி நடப்பவர்களை சட்டத்தின் வழி நின்று முறையான நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலர்கள் ஆதரவைத் தொடர்ந்து, பிஹார் ஐபிஎஸ் சங்கமும் டெல்லி போலீஸாரின் போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor