ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து நேபாளத்தில் விபத்து!!

நேபாளத்தின் டோலாகா மாவட்டத்திலிருந்து தலைநகர் காத்மாண்டுவுக்கு சென்ற பேருந்து ஒன்று சிந்துபால்சவுக் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றினுள் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த பேருந்தில் சிறுவர்கள், பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். சிந்துபால்சவுக் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான வீதியில் பேருந்து வேகமாக பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தறிக்கெட்டு ஓடியதில் வீதியை விட்டு விலகி 165 அடி பள்ளத்தில் உள்ள சன்கோஷி ஆற்றுக்குள் விழுந்தது.

ஆற்றின் ஆழம் அதிகமாக இருந்ததால் பேருந்து நீரில் மூழ்கியது. விபத்து குறித்து அறிந்த பிரதேசவாசிகள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், மீட்புக் குழுவினருக்கும் அறிவித்தனர். அவர்கள் அளித்த தகவலின் படி பொலிஸாரும் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

எனினும் 3 மாத குழந்தை மற்றும் 6 சிறுவர்கள் உட்பட 17 பேர் மீட்டுப் பணி இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் படுகாயங்களுடன் 56 பேர் மீட்கப்பட்டனர்.

அவர்கள் உடனடியாக அம்புலன்ஸ்ஸூகள் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சிலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. கடந்த மாதம் தலைநகர் காத்மாண்டுவுக்கு அருகே அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor