மாமனாருடன் மோத ரெடியாகும் மாப்பிள்ளை!

கோலிவுட்டில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி இரண்டு படங்களும் வெற்றி பெறும் ஆரோக்கியமான சூழல் நிலவி வருகிறது.

கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களும், கடந்த தீபாவளிக்கு விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி திரைப்படங்களும் வெளியாகி வெற்றி பெற்றன.

அந்த வரிசையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அசுரன் படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்குப் பிறகு, சிறிது ஓய்வில் இருந்த தனுஷ், அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். தற்போதைக்கு D-40 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஷுட்டிங், லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம், துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ் என்ற படத்திற்கும் தனுஷ் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இதனால், D-40 ஷுட்டிங்கை முடித்து கொடுத்த கையோடு சென்னை திரும்பும் அவர், பட்டாஸ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

இந்தப் படத்தை டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யும் முனைப்போடு தனுஷ் மற்றும் தயாரிப்பு தரப்பு உள்ளதாம்.

இந்த நிலையில் பட்டாஸ் படத்தை வரும் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அதே நேரத்தில் ரஜினி நடித்த தர்பார் படத்தையும் பொங்கல் திருநாளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை, இவ்விரு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டால், ரஜினியின் தர்பார் படம் ஜனவரி 10ஆம் தேதியும், தனுஷின் பட்டாஸ் படம் ஜனவரி 15ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது.

அப்படி, இருவரின் படங்களும் ரிலீஸ் ஆனால், முதல்முறையாக மாமனாருடன் மாப்பிள்ளை மோதும் நிகழ்வை காணும் பாக்கியம் தமிழ் திரையுலகிற்கும்,  ரசிகர்களுக்கும் கிடைக்கும்.


Recommended For You

About the Author: Editor