பிரியங்காவின் செல்போன் ஒட்டுக் கேட்பு

நம் நாட்டின் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்கள் இஸ்ரேல் உளவு மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டு வருவதாக பரபரப்பான தகவல்கள் பரவி வரும் நிலையில், இப்படி ஒட்டுக் கேட்பப்படுபவர்கள் பட்டியலில் காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியும் இருப்பதாக காங்கிரஸ் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த ஒட்டுக் கேட்பு மத்திய அரசுக்குத் தெரிந்தே நடக்கிறதா என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியிருக்கிறது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலகெங்கிலும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வீடியோ கால், வாய்ஸ்-கால், மெசேஜ், தகவல் பரிமாற்றம், புகைப்படம், வீடியோ காட்சிகள் பரிமாற்றம் உள்ளிட்ட இதன் வசதிகள் அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடி பேர் இதனை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பெடரல் நீதிமன்றத்தில் அக்டோபர் 29ஆம் தேதி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. அவ்வழக்கில், இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான என்எஸ்ஓ, உலகம் முழுவதுமுள்ள மூத்த பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என சுமார் 1,400 பேரின் மொபைல் போனை ஹேக் செய்து, அவர்களது வாட்ஸ் ஆப் தகவல்களை உளவு பார்க்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சில முக்கிய நபர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து வாட்ஸ் அப் அமெரிக்காவில் வழக்குத் தொடுத்துள்ள நிலையில் நேற்று (நவம்பர் 3) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா, பெகாசஸைப் பயன்படுத்தி பிரியங்கா காந்தியின் செல்போனும் வாட்ஸ்அப் மூலம் ஹேக் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
“பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் தளத்திலிருந்து பிரியங்காவுக்கு ஒரு செய்தி வந்துள்ளது, பேஸ்புக்குக்கு சொந்தமான செய்தி தளத்திலிருந்து பிரபுல் படேல் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் செய்திகள் வந்துள்ளன” என்று கூறியுள்ளார் அவர்.
கடந்த வாரம் சர்ச்சை வெடித்த பின்னர், காங்கிரஸ் தகவல்தொடர்பு குழு, காந்தியிடம் இது குறித்து கேட்டதுடன், குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆர்வலர்கள் பெற்ற செய்திகளின் நகலை அனுப்பியதாகவும், அவர் இதே போன்ற செய்திகளைப் பெற்றிருப்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் கூறிய சுர்ஜீவாலா, “ ஆளும் பாஜகவை எதிர்க்கும் தலைவர்களை இதுபோன்ற உளவு மென்பொருளால் குறிவைத்துள்ளார்கள். மேலும் பல மூத்த அரசியல்வாதிகள் மற்றும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளையும் உளவு பார்த்ததாக கட்சி சந்தேகிக்கிறது.
சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் ”என்று கோரினர்.
கடந்த மே மாதத்தில் இருந்தே இந்த உளவு மென்பொருள் செயல்பாட்டில் இருப்பது அரசுக்கு தெரியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor