தமிழக பேருந்துகளை சீரமைக்க யேர்மனி நிதியுதவி!

தமிழகத்தில் போக்குவரத்து துறையை சீரமைக்க 1,600 கோடி ரூபாய் வழங்கப்படும் என யேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்தார்.

இந்தியா, யேர்மனி இடையே 5ஆவது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க யேர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்கல் வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் பவனில் பிரதமர் மோடியை நேற்று(நவ.1) ஏஞ்செலா மெர்கல் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் கூட்டாக 5 அறிவிப்புகளையும், விண்வெளி, விமானப் போக்குவரத்து, கடற்சார் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட 11 துறைகளில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர்.

இது இரு நாட்டுக்கும் இடையிலான உறவையும், தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது.இதனிடையே, ஏஞ்சலா மெர்கல் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர் பிரச்சினை குறித்தும் கேள்வி எழுப்பினார்.

மேலும் “காஷ்மீரில் உள்ள மக்களின் நிலைமை நிலையானதாக இல்லை” என தன் கருத்தைக் கூறினார்.

இச்சந்திப்பின் போது, புதிய மற்றும் அதிநவீன தொழில் நுட்பத்துறைகளில் இந்தியாவுடன் யேர்மனி இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, 5ஜி, செயற்கை நுண்ணறிவு போன்ற சவாலான துறைகளிலும் இரு நாடுகள் இணைந்து செயல்படவுள்ளது.

இந்நிலையில், ஏஞ்சலா மெர்கல் இன்று டெல்லியில் தொழில்துறையினரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘தமிழகத்தில் போக்குவரத்து துறையை சீரமைக்க இந்திய ரூபாய் மதிப்பில் 1,600 கோடி ரூபாய் வழங்கப்படும்.

டீசல் பேருந்துக்கு பதில் மின்சார பேருந்துகளை ஏன் இயக்க வேண்டும் என்பதற்கு டெல்லி காற்று மாசே நல்ல உதாரணம்’’ எனக் கூறினார்.

மழைகாலத்தில் பேருந்துக்குள்ளேயே மழை விழுவது, படிக்கட்டுகள் உடைந்திருப்பது, இருக்கைகள் சீரற்று இருப்பது போன்ற பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தமிழக பேருந்துகளின் நிலை யேர்மன் வரை எதிரொலித்திருக்கிறது.


Recommended For You

About the Author: Editor