தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்று தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா – ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி மூன்றுநாள் விஜயமாக தாய்லாந்து சென்றுள்ளார்.

இதன்போது ஆதித்யா பிர்லா குழுமத்தின் பொன்விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மோடி மேற்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியாவில் வழக்கமான நிர்வாக முறை, அதிகாரிகள் நடத்தும் நிர்வாக முறை அனைத்தும் நிறுத்தப்பட்டு, தற்போது முதலீட்டாளர்களுக்கு ஏற்ற உருமாற்றங்களை நோக்கி நகர்ந்து வருகிறோம். உலகளவில் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய ஏற்ற நாடாக இந்தியா விளங்கி வருகிறது.

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுதான் சரியான நேரம். அன்னிய நேரடி முதலீடு, எளிதாகத் தொழில் செய்தல், எளிதாக வாழ்தல் தரம் உயர்ந்திருக்கிறது, உற்பத்தி உயர்ந்து வருகிறது. அரசுப் பணிகளில் காலதாமதம்,ஊழல் ஒழிப்பு,அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து முதலீட்டாளர்கள் ஊழல் செய்தல் போன்றவை குறைந்து வருகிறது.

உலகளவில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்குச் சிறந்த பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா 28600 கோடி அமெரிக்க டொலர்களை முதலீடாகப் பெற்றுள்ளது.

உலகளவில் முதலீட்டாளர்களுக்குச் சிறந்த முதலீடு செய்யும் நாடாக இந்தியா இருந்துவருவதால், தாய்லாந்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அழைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor