மீண்டும் தரை இறங்க இஸ்ரோ நடவடிக்கை – சிவன் தகவல்

நிலவின் தென் துருவத்தில் மீண்டும் மெல்ல தரை இறங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 50ஆவது பட்டமளிப்பு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே. சிவன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வைத்தார்.

அதன்பின்னர் உரையாற்றிய அவர், “நீங்கள் அனைவரும் சந்திரயான்-2 திட்டத்தை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தொழில்நுட்பத்தை பொறுத்தமட்டில் விக்ரம் லேண்டரை மெல்ல தரை இறங்க வைக்க முடியாமல் போய்விட்டது.

எனினும் நிலவின் மேற்பரப்பில் இருந்து 300 மீட்டர் தொலைவுவரை எல்லா அமைப்புகளும் சரியாகத்தான் இயங்கின.

எதிர்காலத்தில் நிலவில் மெல்ல தரை இறங்க ஏற்ற வகையில் எல்லாவற்றையும் சரியாக அமைக்க மிகவும் மதிப்புவாய்ந்த தரவுகள் இருக்கின்றன. இஸ்ரோ எதிர்காலத்தில் தனது முழு அனுபவத்தையும் அறிவையும் தொழில்நுட்ப வலிமையையும் இதில் காட்டும் என உறுதியைளிக்கிறேன்” என மேலும் தெரிவித்தார்.

மேலும் இதன்போது “நிலவின் தென் துருவத்தில் தரை இறங்க மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படுமா?” என கே.சிவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளித்த அவர், “நிச்சயமாக முயற்சிப்போம். சந்திரயான்-2 உடன் கதை முடிந்து விட வில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor