சித்திரவதையை மலேசிய பொலிஸ் மறுப்பு!

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் உள்ள சந்தேகநபர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மலேசிய பொலிஸ் நிராகரித்துள்ளது.

அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என மலேசிய பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின்கீழ் இரண்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட 12 பேர் அண்மையில் மலேசியா பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தடுப்புக் காவலில் அவர்களில் 5 பேர் பாலியல் ரீதியாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்தன.

குறித்த குற்றச்சாட்டு குறித்து விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள மலேசியா பொலிஸ் மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டினை மேற்கொள்ளும் எந்தவொரு நபரேனும் அதனை நிரூபித்துக் காட்டுமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.

சந்தேகநபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டுள்ளதால், அவ்வாறான சித்திரவதைகள் இடம்பெற்றிருந்தால் குறித்த கமராக்களில் பதிவாகியிருக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதெவேளை, மலேசிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டென் ஶ்ரீ முஹய்தீன் யசீனும் குறித்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதுடன், அது தொடர்பாக விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor