எதிர்காலத்தில் பாரிய விளைவை சந்திக்கும் நிலை வரும்

கல்முனை பிரதேசத்தை வேறுபடுத்தி இனத்துவேசத்தை இதற்குள் கொண்டு வந்து எங்களை பிரிக்க நினைப்பார்களானால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை வரும் என முன்னாள் பிரதியமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எச்சரித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் பிரதேச செயலகத்தின் எதிரில் உண்ணாவிரத போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு உள்ளிட்டவர்கள் மூன்றாவது நாளாகவும் இன்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திற்கு சென்ற நிலையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கருணா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்த சங்கரத்ன தேரருக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். உண்மையிலேயே இதுவொரு நீண்டகால பிரச்சினையாக கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகிறது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்திலே கூட இது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடத்திய போது தீர்வினை வழங்க அவர் முன்வந்த நிலையில் பல முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குறுக்கே நின்று தடுத்திருக்கிறார்கள்.

பிரதேச செயலகம் உள்ளது. அதனை தரமுயர்த்தும் வேலை மாத்திரமே உள்ளது. இந்த நிலையில் இன்று இதுவொரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு நின்று இந்த பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டும்.

கல்முனை பிரதேசத்தை வேறுபடுத்தி இனத்துவேசத்தை இதற்குள் கொண்டு வந்து எங்களை பிரிக்க நினைப்பார்களானால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை வரும்.

இதற்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லை எனில் இலங்கை நாட்டில் முற்றுமுழுதாக போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor