தேர்தலில் புதிய முறை அறிமுகம்.

இலங்கையில் தேர்தல் ஒன்றின்போது முதன் முதலாக ´கார்ட்போர்ட்´ அட்டைகளால் ஆன, வாக்குச் சீட்டுப் பெட்டிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு மிக நீளமானதாக அமைந்துள்ளமையினால், அதிக வாக்குச் சீட்டுப் பெட்டிகள் தேவைப்படும் என்றும், இதன்போது ஏற்படும் செலவினைக் குறைப்பதற்காகவே ´கார்ட்போர்ட்´ வாக்குச் சீட்டுப் பெட்டிகளை பயன்படுத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த பெட்டியின் நான்கு பக்கங்களும் ´டேப்´ (பசைப் பட்டை) கொண்டு ஒட்டி ´சீல்´ வைக்கப்பட்டே வாக்களிப்பு நிலையத்தில் வைக்கப்படும் என்று விவரித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், “வாக்களிப்பு நிறைவடைந்தவுடன், வாக்குச் சீட்டுகளை இடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓட்டையினை மூடி, பூட்டுப் போடுவதற்கான வசதியும், குறித்த பெட்டியில் உருவாக்கப்பட்டுள்ளது,” எனவும் தெரிவித்தார்.

இந்தப் பெட்டியொன்றுக்கான விலை 1500 இலங்கை ரூபாயாகும். இதில் போடப்படும் பூட்டுக்கும் சேர்த்தே இந்தத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் பயன்படுத்தப்பட்ட மரப்பலகையினால் ஆன வாக்குப் பெட்டியொன்றுக்கான செலவு 8500 ரூபாய் என்பதோடு, அந்தப் பெட்டிகளில் 450க்கு உட்பட்ட வாக்குச் சீட்டுகளையே போட முடியும் என்றும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர், வாக்குச் சீட்டுப் பெட்டிகள் ஒவ்வொன்றும், பிளாஸ்டிக் பை ஒன்றினுள் போடப்பட்டே எடுத்துச் செல்லப்படும்.

எவ்வாறாயினும் உலகில் பல நாடுகளில் தேர்தல்களின்போது, வாக்குச் சீட்டுப் பெட்டிகளாக, ´கார்ட்போர்ட்´ பெட்டிகள் பயன்படுத்தப்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

தற்போது நடக்கவுள்ள இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால், வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குளமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால், இந்தத் தேர்தலில் அதிகளவு வாக்குச் சீட்டுப் பெட்டிகள் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை, வாக்குச் சீட்டுகளின் நீளம் அதிகமாக உள்ளமையினால் ஒவ்வொரு வாக்காளருக்கும் வாக்களிக்கும் நேரமும் அதிகமாகத் தேவைப்படும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. அதனால், இலங்கையில் முதன்முதலாக இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரமும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வாக்களிப்பு நேரமாக காலை 7.00 மணி முதல், மாலை 4.00 மணி வரையிலான காலம் வரையறுக்கப்பட்டிருந்தது. தற்போது காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கான காலமும் பிந்தும் என்றும், நவம்பர் 18ஆம் திகதி பகல் பொழுதிலேயே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்