ரங்காவிடம் மூன்று நாட்களுக்குள் வாக்குமூலம் பெற உத்தரவு.

ஶ்ரீ ரங்கா மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.சேனாரத்ன தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் கண்காணித்த சட்ட மா அதிபர் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து சட்ட மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் குருசிங்க, பொலிஸ் அத்தியட்சகர் குசும சந்திரகுமார மற்றும் பொலிஸ் அதிகாரி பண்டார ஆகிய அதிகாரிகளை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இன்று (01) அழைத்து விடயங்களை கேட்டறிந்த பின்னர் சட்டமா அதிபர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபரான ஶ்ரீ ரங்காவிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை எனவும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பி.டி.அமரசிறி குமார சேனாரத்னவிடமும் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையை மீறிய குறித்த அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கை குறித்து அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த அதிகாரிகளுக்கும் மற்றும் சந்தேகநபர்களுக்கும் இடையில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமையவாக மேற்குறிப்பிட்ட அதிகாரிகள் செயற்பட்டுள்ளமை இதன் மூலம் தெரியவருவதாவது, சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் காரணமாக ஶ்ரீ ரங்கா மற்றும் பி.டி.அமரசிறி குமார சேனாரத்ன ஆகிய சந்தேகநபர்களிடம் உடனடியாக வாக்குமூலங்களை பதிவு செய்து இந்த கடிதம் கிடைத்து மூன்று நாட்களுக்குள் முழு விசாரணை அறிக்கையை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு பெற்றுத் தருமாறு குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், மேல் குறிப்பிட்ட அதிகாரிகளின் தொடர்பில் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்