ஒலிம்பிக் ஹாக்கி தகுதி: சாதிக்குமா இந்தியா!

ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் இன்று துவங்குகின்றன. ஆண்கள் அணி ரஷ்யாவை சந்திக்கிறது. இந்திய பெண்கள் அணி வலிமையான அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

ஜப்பானின் டோக்கியோவில் 2020ல் ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதற்கான ஹாக்கி போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும்.

ஒலிம்பிக் நடத்தும் அணி என்ற அடிப்படையில் ஜப்பான் மற்றும் பல்வேறு தொடர்களில் சாம்பியன்கள் ஆன அர்ஜென்டினா, தென் ஆப்ரிக்கா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா என 5 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

மீதமுள்ள 7 இடங்களுக்கு 14 அணிகள் போட்டியிடுகின்றன. இவை இரண்டு, இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, இரண்டு போட்டியில் மோதும். ஒட்டுமொத்தமாக அடித்த கோல் அடிப்படையில் ஒலிம்பிக் செல்லும் அணி முடிவு செய்யப்படும்.

ஒருவேளை கோல் எண்ணிக்கை சமமாக இருக்கும் பட்சத்தில் தரவரிசையில் முன்னிலை பெற்ற அணி ஒலிம்பிக் செல்லும்.

ரஷ்யாவுடன் மோதல்

இன்றும், நாளையும் என புவனேஸ்வரில் நடக்கும் போட்டியில் ‘நம்பர்-5’ இடத்திலுள்ள இந்திய ஆண்கள் அணி, 22வது இடத்திலுள்ள ரஷ்யாவை சந்திக்கிறது.

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி எளிதாக சாதித்து ஒலிம்பிக் செல்வதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சற்று சொதப்பினாலும் ஒலிம்பிக் செல்ல முடியாது என்பதால் இரு நாட்களும் கூடுதல் கவனத்துடன் இந்திய வீரர்கள் செயல்பட வேண்டும்.
பெண்களுக்கு சிக்கல்

பெண்கள் அணியை பொறுத்தவரையில் உலகத் தரவரிசையில் 9வது இடத்திலுள்ளது. இன்றும், நாளையும் நடக்கும் போட்டியில் ‘நம்பர்-13’ அணியான வலிமை யான அமெரிக்காவை எதிர் கொள்கிறது.
சொந்தமண் பலம்

இந்திய அணி கேப்டன் ராணி ராம்பால் கூறுகையில்,”ஆசிய விளையாட்டில் சாதித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற திட்டமிட்டு இருந்தோம். துரதிருஷ்டவசமாக நழுவிவிட்டது. இதனால் எங்கள் கவனம் முழுவதும் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் திரும்பியுள்ளது. சொந்தமண்ணில் ரசிகர்கள் முன் விளையாட உள்ளதால் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.


Recommended For You

About the Author: Editor