வாக்களித்ததை சமூக ஊடகங்களில் பதிவிட்டால் சிறை.

வாக்களித்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடும் அரச ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் உள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச உத்தியோகத்தர்களே தபால் மூலம் வாக்களிக்கின்றனர். சாதாரண மக்களை விடவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியவர்கள் வாக்களிக்கும்போது அதனை புகைப்படம் எடுத்து முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருக்கின்றனர்.

இது தேர்தல் சட்டத்துக்கு அமைய தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறான தவறு செய்பவர்களுக்கு குறைந்தது 3 வருட சிறை தண்டணை வழங்கப்படும்.

எனினும் அரச அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொள்வது வெட்கப்பட வேண்டிய விடயம் என்பதோடு கவலையளிப்பதாகவும் இருக்கின்றது. மேலும் ஆள் அடையாளத்தை மறைத்து சட்ட விரோதமாக வாக்களித்து இனங்காணப்படுபவர்களுக்கு 7 வருட சிறை தண்டனை வழங்கப்படும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இவ்வாறு தேர்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட அரச அதிகாரியொருவருக்கு வழங்கப்படவிருந்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு என்பன வழங்கப்படவிடாமல் நிறுத்தப்பட்டன. அதே போன்று இம்முறையும் சட்ட ரீதியான நடவடிக்கைள் நிச்சயம் எடுக்கப்படும்” என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்