சஜித்தை தோற்கடிக்க கட்சிக்குள்ளேயே முயற்சி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை கட்சிக்குள்ளேயே சிலர் முயற்சிகளை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.

தனது அலுவலகத்தில் செய்தியாளர்கள் முன்நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாச மீது தற்போதும் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. அவர் சிறந்த மனிதர். எனினும் அவரைப் பயன்படுத்தி வேறு எவரேனும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் இருக்கின்றது.

தனிப்பட்ட முறையில் சஜித் பிரேமதாச மீது எனக்கு மிகுந்த அபிமானம் உண்டு. ஆனால் அவருடன் இருக்கும் குழுவினரை நோக்குகையில் திருப்தியடைய முடியவில்லை. அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை தோற்கடிப்பதற்கு கட்சிக்குள்ளேயே சிலர் முயற்சிக்கின்றார்கள்.

என்மீது குற்றச்சாட்டுக்கள் எவையுமின்றி, விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் கட்சியிலிருந்து என்னை யாராலும் நீக்கமுடியாது. அதேபோன்று அமைச்சுப் பதவியிலிருந்து என்னை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே இருக்கின்றது.

ஆகவே வேறு எவருடைய அழுத்தத்தின் பிரகாரமும் நான் கட்சியிலிருந்தும், இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்தும் ஒருபோதும் விலகமாட்டேன். முடியுமானால் அவற்றிலிருந்து என்னை விலக்கிப்பாருங்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான வசந்த சேனாநாயக்க சவால் விடுத்தார்.


Recommended For You

About the Author: Editor