எனது சொத்துக்களை எழுதி தர தயார், ராதாகிரு‌‌ஷ்ணன் சவால்!

விவசாயிகளின் கடனை அடைக்க எனது சொத்துக்களை எழுதி தர தயார், நீங்கள் தயாரா? என திருநாவுக்கரசருக்கு, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் உழைத்த பா.ஜனதா தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் தக்கலை அருகே முட்டைக்காட்டில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ‘எம்.பி.க்களின் சொத்தை விற்று விவசாயிகளின் கடனை அடைக்க சொல்லும் பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் முதலில் அவரது சொத்தை விற்று விவசாயிகள் கடனை அடைக்கட்டும்’ என்று கூறியுள்ளார். அவரது கருத்துக்கு ஏற்ப எனது சொத்துக்களை எழுதி தர தயார்.

தங்களது சொத்துக்களை எழுதி தர அவரும், அவர்களது கட்சி எம்.பி.க்களும் தயாரா?. நான் எனது மொத்த சொத்து விவரங்களையும் தருகிறேன். எழுதி தர என்று? எங்கே? வரவேண்டும். அதுபோல் அவர்களும் வரட்டும்.

அவ்வாறு எழுதினால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களுக்கும், குமரி மாவட்ட மக்களுக்கு கிடைக்கும்.

தூத்துக்குடி மக்கள் காங்கிரஸ், தி.மு.க. மீதுதான் கோப பட வேண்டும். மக்கள் எதிர்த்து போராடும் திட்டம் அனைத்தும் அவர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்டவை. இவற்றுக்கு ஆதாரங்கள் உள்ளன. வேண்டுமென்றால் விவாதத்திற்கு வரட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Recommended For You

About the Author: Editor