ஜப்பானில் மிகப் பழைமை வாய்ந்த ஷுரி மாளிகை தீக்கிரை!!

ஜப்பானில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த ஷுரி மாளிகை இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தீக்கிரையாகி முற்றாக சேதமடைந்துள்ளது.

இந்த அசம்பாவிதத்தின் போது யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்கு தீவான ஒக்கினாவாவில் அமைந்துள்ள சுமார் 500 வருடங்கள் பழைமை வாய்ந்த குறித்த மாளிகையின் பிரதான கட்டமைப்பு தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமை பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த குறித்த ஷுரி மாளிகை ஜப்பானின் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

தீயணைப்பு படை வீரர்கள் இன்று அதிகாலை தொடக்கம் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாக கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முற்றிலும் மரத்தாளான குறித்த கட்டிடம் சுமார் 500 வருடங்களுக்கு முன்தைய ரியுக்யு வம்சத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று எனவும், 1933 ஆம் ஆண்டு தொடக்கம் அந்த மாளிகை ஜப்பானின் தேசிய மரபுரிமை சின்னமாகவும் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் ஷுரி மாளிகை இரண்டாம் உலகப் போரின் போது முற்றிலுமாக சேதமடைந்திருந்த நிலையில், தற்போதிருந்த கட்டிடம் மீளமைக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரதான கட்டிடத்தின் வடக்கு மற்றும் தெற்கு கட்டமைப்பபுகள் தரைமட்டமாகியுள்ளதாக ஜப்பானின் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக உடனடியாக எந்ததகவல்களும் வெளியாகாத நிலையில், இன்று அதிகாலை உள்ளுர் நேரப்படி 2.30 அளவில் அலாரம் ஒலித்ததாக ஒக்னாவா பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் ரியோ கொச்சி என்பவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor