
யாழ்ப்பாணம் இருபாலை கந்தவேள் பாடசாலைக்கு முன்பாக நடந்த கொலைச் சம்பவம் குறித்து கொலையாளி பொலிஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனது தம்பியின் மகளை தான் கழுத்தறுத்து கொல்வதற்கு காரணம் அவர்களது கேலிகள் எல்லை மீறிப்போனமைதான் என கோப்பாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தனக்குச் சேரவேண்டிய தனது தந்தையாருடைய காணியை தம்பியின் குடும்பம் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதாகவும் இதனால் தனது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு குடும்பத்தவர்கள் தன்னை விட்டுப் பிரிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
அதுமாத்திரமன்றி தான் இரவல் காணி ஒன்றில் குடியிருப்பதாகவும் தன்னை தம்பியின் பிள்ளைகள் கேலி செய்வதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையிலேயே பொறுமை இழந்து மன விரக்தியில் தம்பியின் மகளான சரிதாவை கொலை செய்ததாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதேவேளை கொலையுண்ட பெண்ணின் சகோதரர் கூறுகையில், குறித்த பெரிய தந்தைக்கு காணிப்பிணக்கு தொடர்பாக பணம் கொடுத்து பிரச்சினை முடித்துவைக்கப்பட்டாலும் அவர் முன்னரும் ஒரு தடவை தமது தந்தையாருக்கும் தங்கைக்கும் கத்தியால் வெட்டியதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் தமது வீட்டுக்கு கல்லால் எறிவதாகவும் அவ்வழியால் போகும்போது அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் செல்வதுமாக இருந்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த குறித்த சந்தேக நபர் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.