பௌத்த ஆலயங்கள் அழிக்கப்படுவதாக மனு தாக்கல்!!

தமிழ் அரசியல் கட்சிகளின் 13 அம்ச கோரிக்கையில் பௌத்த சின்னங்களை அகற்றுவது குறித்து தெரிவிக்கப் படுகின்றமையினால், வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த விகாரைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பௌத்த விகாரைகள் தொல்பொருள் அடையாளமிடப்பட்ட இடங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு உத்தரவிட வேண்டுமென குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொல்பொருள் மண்டலங்கள் மற்றும் டபிள்யூ.இ.வெருடுவகே என்பவர் சார்பாக சட்டத்தரணி தர்சன வேருவுககேயினால் நேற்று (திங்கட்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவ தளபதி சவேந்திர சில்வா, பதில் பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்ன, முல்லைத்தீவு மற்றும் உப்புவேளி, ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா, புத்த சாசன அமைச்சர் சஜித் பிரேமதாச, புத்த சாசனத்துறை பணிப்பாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த ஆலயங்கள், பாரம்பரியம்மிக்க தொல்பொருள் இடங்கள் ஒரு செயன்முறை அடிப்படையில் அழிக்கப்பட்டு வருகிறது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சமர்ப்பிக்க தமிழ் அரசியல் கட்சிகள் தயாரித்த 13 அம்ச கோரிக்கையிலும் பௌத்த சின்னங்களை அகற்றுவது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வடக்கு கிழக்கிலுள்ள பௌத்த வழிபாட்டிடங்களின் நிலைமை ஆபத்தாகியுள்ளது. 13 அம்ச கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பௌத்த பாரம்பரியத்திற்கு ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் பௌத்த வழிபாட்டிடங்களையும் பாரம்பரியத்தையும் பேண ஒரு செயன்முறையை தயாரித்து அமுல்படுத்த அரசிற்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor