
மக்களின் தேவைகளை பூர்திசெய்ய பொலிஸ் சேவையில் இணைய தமிழ் பெண்கள் முன்வர வேண்டும் என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் வடமாகாணத்தில் பதின் மூன்றரை இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள், பொலிஸ் சேவைக்காக விண்ணப்பம் கோரப்பட்ட போது 65பேர் மாத்திரமே விண்ணப்பித்திருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தலைமையில் இடம்பெற்ற உடுவில் மகளிர் கல்லூரியில் போக்குவரத்து சட்டதிட்டங்கள் தொடர்பான கருத்தமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் அன்றாட கடமைகளிற்கு பொலிஸ் நிலையம் சென்றால் தமிழ் பொலிஸார் இல்லை. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது பொலிஸார் தான் ஆனால் பொலிஸாரின் கடமைக்கு தமிழ் பெண்கள் சேர்வதில்லை.
பெண்களின் பிரச்சினைகளை பெண்களிற்கு தான் சொல்ல முடியும். பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண்கள் இல்லை. வடமாகாணத்தில் பதின் மூன்றரை இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.
இருப்பினும் பொலிஸ் சேவைக்காக விண்ணப்பம் கோரப்பட்ட போது 65பேர் மாத்திரமே விண்ணப்பித்திருந்தனர். வடக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழ் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
குறித்த நிகழ்வின் போது வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தனது சொந்த நிதியில் 100 பாடசாலை மாணவர்களிற்கான சீருடைகளையும் வழங்கிவைத்துள்ளார்.
இதன்போது சுண்ணாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸார் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.