தமிழக பதவியேற்பு பற்றி ருவிற்றறில் கலக்கும் தமிழ் வாழ்கவும்!!

மக்களவையில் தமிழக எம்.பி-க்கள் தமிழில் பதவியேற்றதை அடுத்து, ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் தமிழ் வாழ்க இடம்பிடித்துவருகிறது.

17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று கூடியது. நேற்று முதல் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுவருகின்றனர். மக்களவைத் தேர்தலில், தமிழகத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

உறுப்பினர்களுக்கு, மக்களவை தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தமிழிலேயே பதவியேற்றுக்கொண்டனர். மத்திய சென்னை தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், `தமிழ் வாழ்க’ என்று கூறி பதவியேற்றுக்கொண்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், ‘வாழ்க தமிழ், வாழ்க அம்பேத்கர்’ என்ற முழக்கத்துடன் பதவியேற்றுக்கொண்டார். மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி சு.வெங்கடேசன், `வாழ்க தமிழ்… வாழ்க மார்க்சியம்’ என்ற கோஷத்துடன் பதவியேற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி தொகுதி எம்.பி கனிமொழி, `வாழ்க தமிழ், வாழ்க பெரியார்’ என்று சொல்லி பதவியேற்றுக்கொண்டார். தி.மு.க கூட்டணி எம்.பி-க்கள் இப்படிச் சொல்லி பதவியேற்க, அ.தி.மு.க சார்பில் ஒற்றை எம்பி-யாக நாடாளுமன்றம் சென்றுள்ள ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும், `வாழ்க தமிழ், வாழ்க எம்.ஜி.ஆர், வாழ்க புரட்சித் தலைவி அம்மா… வந்தே மாதரம்… ஜெய்ஹிந்த்’ என்று சொல்லி பதவியேற்றுக்கொண்டார்.

இவர்கள் இப்படி பதவியேற்க, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார், “ஜெய் ஜவான்… ஜெய் கிசான்… வாழ்க ராஜீவ் காந்தி” என்றார். வசந்தகுமார் தவிர்த்து அனைவரும் தமிழ் வாசகங்களை மட்டுமே சொல்லி பதவியேற்றுக்கொண்டனர்.

இதனிடையே, ‘தமிழ் வாழ்க என்றும் வாழ்க அம்பேத்கர்’ என்றும் சொல்லும் போதும் பா.ஜ.க-வினர் ‘பாரத் மாதா கி ஜே’ என்றும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் கோஷமிட்டனர். தமிழக எம்பி-க்கள் தமிழில் பதவியேற்றதை அடுத்து, ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில்

தமிழ்_வாழ்க இடம்பிடித்துவருகிறது. தமிழக எம்.பி-க்களைப் பாராட்டியும், பா.ஜ.க-வின் எதிர்ப்பை, கோஷத்தை முன்னிறுத்தியும் #தமிழ்_வாழ்க என்ற ஹேஷ்டேக்கை தமிழ் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்துவருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor