அரசியலுக்கு வருவாரா ரஜினி!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அதிக ஆர்வத்துடன் காத்திருந்தவர் ரஜினிகாந்த்.

அரசியலுக்கு வரப் போகிறேன் என்று அறிவித்து ஒன்றே முக்கால் வருடங்கள் கடந்த பிறகும் ரஜினி தனது கட்சியை ஆரம்பிப்பதற்கு இன்னும் பல்வேறு ஆலோசனைகளையும் வியூகங்களையும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். எடப்பாடி ஆட்சி முடிந்த மறு நொடியே ரஜினி கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அவரது தரப்பில் பலரும் இதுவரை சொல்லிவிட்டார்கள்.

இந்தச் சூழலில் இடைத் தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுகவின் செல்வாக்கு குறித்து அறிய ஆவலாகக் காத்திருந்தார் ரஜினி. இந்த இடைத் தேர்தலின் மூலம் திமுகவின் வாக்கு வங்கி, அதிமுகவின் வாக்கு வங்கி ஆகியவை குறித்த ஒரு சாம்பிள் கிடைக்கும் என்பது ரஜினியின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் மூலம் ரஜினிக்குக் குழப்பமும் அதிர்ச்சியுமே அதிகமாகியிருப்பதாகச் சொல்கிறார்கள் ரஜினியோடு தொடர்புடைய அரசியல் ஆலோசகர்கள் வட்டாரத்தில்.

ரஜினியின் வருகை யாருக்கு பாதிப்பு?

ரஜினி புதுக்கட்சி ஆரம்பித்தால் அது திமுகவை பாதிக்குமா, அதிமுகவை பாதிக்குமா என்றொரு விவாதம் ஏற்கனவே ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் மரணத்தால் அதிமுக பலவீனடைந்துவிட்டது, எடப்பாடி – பன்னீர் – தினகரன் போன்றோரின் தனிப்பட்ட செல்வாக்கு தொடர்பான சச்சரவுகளால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதறிவிடும்; எனவே ரஜினியின் வருகையால் அதிகம் பாதிக்கப்படுவது அடுத்த ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பில் இருக்கும் திமுகவே என்பதே பலரின் கணிப்பாக இருந்தது. இதற்கு ஏற்றாற்போல் திமுகவுக்கும் ரஜினிக்குமான உரசல்களே அவ்வப்போது நடந்து வந்தன.

இடைத் தேர்தல் சொல்லும் செய்தி

நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தோற்று அதிமுக வென்றுவிட்டது என்பது பொதுவான தேர்தல் முடிவுகள். ஆனால், இந்த தேர்தல் மூலம் ரஜினி இன்னொரு தெளிவான செய்தியைப் புரிந்துகொண்டிருக்கிறார்.

அதாவது புதுக்கட்சி ஆரம்பித்து, பெருவாரியான வாக்குகளைப் பெறுவதற்குரிய வெற்றிடம் வாக்காளர்களிடம் இருக்கிறதா, இல்லையா என்பதற்கான பதில்தான் ரஜினிக்குக் கிடைத்திருக்கும் செய்தி.

திமுக தோற்றிருந்தாலும், அதன் வாக்கு பலம் குறையவில்லை. அதேபோல அதிமுக ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் தனது பாரம்பரிய வாக்குகளை இழந்துவிட்டது என்று சொல்வதும் தவறு.

அதிமுகவின் பலம் எம்ஜிஆர், ஜெயலலிதா யாரையும்விட அவர்கள் மக்கள் மனத்தில் பதிய வைத்த இரட்டை இலையால்தான் நிலைபெற்றிருக்கிறது என்பதையும் உணர்த்தியிருக்கின்றன இந்த இடைத் தேர்தல் முடிவுகள்.

மூன்று தேர்தல்களும், முன்னேற்றக் கழகங்களும்!

பொதுவாகவே அரசியல் உலகில் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் ஒரு கட்சியின் பங்கேற்பு, பலன் அடைவு ஆகியவற்றைப் பொறுத்து அக்கட்சியின் பலத்தை, பலவீனத்தை முடிவு செய்யலாம்.

அதன்படி 2011, 2016, 2019 ஆகிய தேர்தல்களில் திமுகவும் அதிமுகவும் பெற்று வந்துள்ள வாக்குகளின் விவரங்களைப் பார்க்கலாம். விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளையுமே ஆய்வுக் களங்களாக எடுத்துக்கொண்டால் 2011 முதல் இன்று வரையான சுமார் எட்டு வருட தமிழக அரசியல் வாக்கு வங்கி நிலவரம் பற்றிய ஒரு புரிதல் சித்திரம் புலப்படுகிறது.

விக்கிரவாண்டியில் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக 63,759 வாக்குகள் பெற்றது. பதிவான வாக்குகளில் இது 41.93 சதவிகிதமாகும். அப்போது வெற்றிவாய்ப்பை இழந்த திமுக, அதே தொகுதியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் 63,757 வாக்குகளைப் பெற்று வென்றது. இது பதிவான வாக்குகளில் 35.69%.

இதே விக்கிரவாண்டியில் 2019 மே மாதம் விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் திமுக (அணி) பெற்ற வாக்குகள் 86,432. இது மொத்த வாக்குகளில் 46.84 சதவிகிதம். இப்போது நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் 68,842 வாக்குகள் பெற்றுள்ளார்.

கூட்டணிக் கணக்குகள், அவ்வப்போதைய அரசியல் சூழல் ஆகியவற்றுக்கிடையில் திமுக இந்தத் தொகுதியில் 60,000 முதல் 86,000 வாக்குகளைத் தனது சராசரி வாக்கு வங்கியாக நிலையாகப் பெற்றிருக்கிறது

இதே விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக 2011ஆம் ஆண்டு தன் கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை நிறுத்தியது. அதில் 78,856 ஓட்டுகளைப் பெற்றது அதிமுக கூட்டணி. 2016 தேர்தலில் அதிமுக தனியாக நின்று 58,845 வாக்குகள் பெற்றது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக அணியில் நின்ற பாமக 74,819 வாக்குகளைப் பெற்றது. இப்போது நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 1,13,766 வாக்குகளைப் பெற்றுள்ளது.

விக்கிரவாண்டியில் இப்படியென்றால் நாங்குநேரியிலும் திமுக, அதிமுக அணிகள் வெற்றி தோல்விகளைக் கடந்து தங்களது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ரஜினியின் இடம் இது?

இப்படி கடந்த பத்து வருட தமிழகத் தேர்தல் களத்தில் திமுக, அதிமுக அக்கட்சிகள் சார்ந்த கூட்டணிக் கட்சிகள் வெற்றி தோல்வியைக் கடந்து தங்களது இயல்பான வாக்கு வங்கியை இழக்கவே இல்லை. ஜெவின் மரணத்துக்குப் பின்னால் அதிமுக தனது வாக்கு வங்கியை இழந்துவிட்டது என்று சொல்லப்பட்டதை இந்த இடைத் தேர்தலில் தவறென்று தன் இயல்பு பலத்தைப் பெற்று நிரூபித்திருக்கிறது அதிமுக.

இந்த நிலையில் இன்னும் ஒரு வருடத்தில் ரஜினி களத்துக்கு வருவதன் மூலம் இந்த வாக்கு வங்கி வரைபடத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட சாத்தியக் கூறுகள் இல்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் அனுமானம். அப்படி இந்த வாக்கு வங்கியில் மாற்றம் பெரிய அளவில் வராது என்றால், ரஜினி போட்டியிடுவதன் மூலம் ஓர் அதிர்வையோ, மாற்றத்தையோ ஏற்படுத்த முடியாது என்பதுதானே எதார்த்தம்.

இடைத் தேர்தல் முடிவுகளின் மூலம் ரஜினியைக் குடைந்துகொண்டிருக்கும் கேள்வி இதுதான். ரஜினி அரசியல் களத்துக்கு ஏற்கெனவே வந்துவிட்டார். அவர் தேர்தல் களத்துக்குத்தான் இன்னும் வரவில்லை.

இந்த நிலையில் ரஜினியின் வருகை முன்னேற்றக் கழகங்களின் வாக்கு வங்கிக்கு இடையே பெரிய சேதாரமல்ல… சிறிதளவு சேதாரத்தைக்கூட ஏற்படுத்த முடியுமா என்பதுதான் இந்த இடைத் தேர்தல்கள் வெற்றி தோல்வியைத் தாண்டி அரசியல் உலகத்துக்கு அளித்திருக்கும் கேள்வி.

இந்த இரு தொகுதிகளிலும் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகள் தங்களது நிரந்தரமான வாக்கு வங்கியில் பெரிய அளவு இழப்பைச் சந்திக்கவில்லை என்பதுதான் ரஜினி அறிந்துகொண்ட உண்மை.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தொடர்ந்து தங்களது வாக்கு வங்கிகளை நிலைநிறுத்திக் கொண்டுவரும் நிலையில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவரது ஓட்டு வங்கி என்பது எங்கிருந்து எடுக்கப்படும் என்பதுதான் அந்தக் கேள்வி.


Recommended For You

About the Author: Editor