
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட புவியதிர்வு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 125 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள இபின் நகரத்தில் நேற்றிரவு 10.55 மணியளவில், முதல் புவியதிர்வு ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த புவியதிர்வால் பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்தன.
அதே பகுதியில் இன்று காலை மீண்டும் புவியதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் பரிமாணத்தில் 5.3 ஆக பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த புவியதிர்வுகளால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மீட்புப்பணியில் 300 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் தங்குவதற்காக தற்காலிகமாக ஐந்தாயிரம் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2008-ம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 70 ஆயிரம் பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது