தலிபான்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 8 சிறுவர்கள் பலி.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 6 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அந்நாட்டின் பர்யாப் மாகாணத்தின் பஷ்டுன் கோட் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீதியில் தலிபான் பயங்கரவாதிகள் கண்ணிவெடிகளை பதித்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்ணிவெடிகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த வீதி அருகே விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கண்ணிவெடிகள் திடீரென வெடித்தன.

இந்த தாக்குதலில் 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறன. மேலும், பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் வன்முறைத் தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு அரசபடை மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி, தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்