பேச்சுவார்த்தை தோல்வி:மருத்துவர்கள் போராட்டம்!

டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார செயலாளருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

அரசு மருத்துவர்களுக்குக் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப் படுத்த வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் இன்று (அக்டோபர் 25) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் லட்சக் கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று காலை சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் 4 அரசு மருத்துவ பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படாத நிலையில் போராட்டம் தொடரும் என்று மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர். இவர்களுக்கு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், ”லட்சக்கணக்கான ஏழை மக்களின் உயிர்நாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் என்பதை உணர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களை அழைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களும், ‘வேலை செய்ய மாட்டோம்’ என்ற போராட்ட முறையைக் கைவிட்டு, முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகாண முயற்சி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி.தயாநிதிமாறன் உள்ளிட்டோர் மருத்துவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், ”மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக அரசு தயாராக உள்ளது .பொதுமக்களின் நலன் கருதியும், மழைக்காலமாக இருப்பதாலும் மருத்துவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor