ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்க போராட்டம்.

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குழந்தை சுர்ஜித்தின் சத்தத்தை தற்போது கேட்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ஆழ்துளை கிணற்றில் மண் விழுந்ததால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், குழந்தையை பத்திரமாக மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மீட்பு குழுவினரும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை மூர்ச்சையாகி மீட்கப்பட்டாலும், உயிர்பிழைக்க வைக்க அனைத்து மருத்துவ வசதிகளும் இங்கு தயார் நிலையில் உள்ளன எனத் தெரிவித்தார்.

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ – கலாமேரி ஆகியோரின் 2 வயதுக் குழந்தையான சுர்ஜித் வில்சனே இந்த சம்பவத்தில் சிக்கியுள்ளார்.

தண்ணீர் தேவைக்காக 400 அடியில் அமைக்கப்பட்ட ஆழ் துளைக் கிணறு ஏற்கனவே மூடப்பட்டுள்ள போதும், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியதாக தெரிகிறது.

இதன்போது சிறுவன் சுர்ஜித் எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று (வெள்ளிக்கிழமை) தவறி விழுந்தான். இதனையடுத்து அங்க திரண்ட மக்கள் உடனடியாக இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், மற்றும் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து மிகவும் குறுகலான அந்த ஆழ்துளை கிணற்றில், ஆட்கள் யாரும் இறங்க முடியாத நிலையில், கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தையை மீட்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

ஆழ்துளை கிணற்றின் அடிப்பகுதியில் சிக்கியுள்ளதால், குழந்தைக்கு மூச்சுத்திணறாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் ஒக்சிஜன் செலுத்தும் பணியில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர். மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் இருந்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நிபுணர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்து, தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து சுர்ஜித் வில்சனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே குழந்தையை மீட்க நள்ளிரவு கோவையில் இருந்து மேலும் ஒரு குழுவும் வந்து முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே குழந்தையை மீட்க மீண்டும் பக்கவாட்டில் குழி தோண்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நாமக்கல்லில் வந்த மீட்பு குழுவினர் துணையுடன் அவர்கள் கொண்டு வந்த உபகரணம் உதவி கொண்டு குழந்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தை நலமாக மீட்கபட வேண்டும் என்பதுவே அனைவரது வேண்டுதலாகவும் இருக்கின்றது. இது தொடர்பில் சமூக வளைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவு செய்து பிரார்த்தித்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்