முல்லைத்தீவில் மனித எச்சங்கள் குறித்த அகழ்வுப் பணி!📷

முல்லைத்தீவு, சுதந்திரபுரத்தில் மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தில் நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

இந்த அகழ்வுப் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.

சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 20ஆம் திகதி தோட்டக் காணியை துப்பரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த பகுதி புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் குற்றப் பிரதேசமாக பிரகடனகப்படுத்தப்பட்டதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் குறித்த பகுதியில் அகழ்வாய்வுகள் செய்வதற்கான அனுமதி கோரப்பட்டு இருந்தது.

அதற்கமைவாக இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது குறித்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் கொட்டப்பட்டுள்ள இடத்திலும், மண்ணை வெட்டியை இடத்திலும் மேலோட்டமாக காணப்பட்ட மனித எச்சங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் நீதிமன்ற அனுமதியோடு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த அகழ்வுப் பணியை நீதிமன்ற தரப்பினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகளும் பார்வையிட்டனர்.

குறித்த பகுதியில் உள்ள தடயங்களின் அடிப்படையில் இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவரின் மனித எச்சங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor