நீலங்களின் சமர் இன்று ஆரம்பம்!

வடக்கு நீலங்களின் சமர் என அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் சிநேக பூர்வமாக மோதிக்கொள்ளும் கடினப்பந்து போட்டி விமர்சையாக ஆரம்பமானது.

குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.

10ஆவது முறையாக இடம்பெறும் குறித்த போட்டியின் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டதுடன், கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர், அயல் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வெற்றிக் கிண்ணத்தினை இரு அணிகளின் தலைவர்களும் ஏந்தியவாறு போட்டி வீரர்கள் மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களால் கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இந்த ஆரம்ப நிகழ்வில் தமிழர் கலை பாரம்பரியத்தை எடுத்தியம்பும் வகையில் மாணவர்களின் ஒயிலாட்டம், பொய்கால் குதிரை, கோலாட்டம், காவடியாட்டம், கரகம் உள்ளிட்ட நடனங்கள் மைதானத்தை அலங்கரித்தமை விசேட அம்சமாகும்.

தொடர்ந்து விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வட. மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.இளங்கோவன் “நகர் புற பாடசாலைகள் போன்று இங்கும் குறித்த விளையாட்டானது வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை வியக்கத்தக்கதாக உள்ளதாகவும் இதனை ஏற்பாடு செய்த பாடசாலை சமூகத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor