தீபாவளிக்கு தமிழ் மக்களுக்கு தீர்வும் வருகுதில்லை!

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வருகிறது ஆனால் கடவுள் கண்ணன் வருவதில்லை தமிழ் மக்களுக்கு தீர்வும் வருகுதில்லை.

“நான் ஒரு தடவை சொன்னால் அது நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற ரஜனியின் பஞ்ச் வசனத்தை அறியாத தமிழ் மக்கள் இருக்க முடியாது.

அதுபோல் “ நான் ஆயிரம் தடவை சொன்னாலும் ஒரு தடவைகூட நடக்காது” என்று பஞ்ச் வசனம் பேச வேண்டியவர் எமது சம்பந்தர் அய்யா.

முதலில் ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார். தீர்வு வரவில்லை. ஆனால் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வந்தது.

அப்புறம் இரு வாரங்களில் தீர்வு குறித்து நல்ல செய்தி வரும் என்றார். அவருக்கு இரண்டாவது சொகுசு பங்களாவும் அதற்கு பெயிண்ட் அடிக்க 4 கோடி ரூபா பண ஒதுக்கீடு என்ற நல்ல செய்தி வந்தது.

அதன்பின்பு அடுத்த தீபாவளி பண்டிகை தீர்வு கிடைத்து மகிழ்வான சூழ்நிலையில் நடக்கும் என்றார்.

அடுத்த தீபாவளிகள் வந்து செல்கின்றன. ஆனால் அவர் கூறிய தீர்வும் வரவில்லை. தீபாவளி கொண்டாடக்கூடிய மகிழ்வான சூழ்நிலையும் தமிழ் மக்களுக்கு இல்லை.

பொதுவாக, ஒரு பண்பான அரசியல் தலைவர், தான் கூறியது நடக்காவிட்டால் தார்மீக பொறுப்பேற்று தமது பதவியை ராஜினாமா செய்வார்.

சம்பந்தர் அய்யா பண்பான தலைவரும் இல்லை. அவர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு நேர்மையான தலைவரும் இல்லை.

ஆனால் குறைந்தபட்சம் தான் சொன்னது ஏன் நடக்கவில்லை என்பதற்கு ஒரு விளக்கமாவது தமிழ்மக்களுக்கு கொடுக்க வேண்டாமா?

கடவுள் கண்ணனுடன் ஒரு உரையாடல்

தமிழன்- கடவுளே! அநியாயமும் அக்கிரமும் தலைவிரித்தாடும்போது அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவேன் என கூறினீர்களே. ஏன் இன்னும் வரவில்லை?

கண்ணன்- தமிழா! உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஆனால் நான் அவதாரமெடுத்து வந்தால் என்னை பயங்கரவாதி என்று உங்கள் சம்பந்தர் அய்யா கூறுவாரே. அதுதான் தயக்கமாக இருக்கிறது.

தமிழன்- என்ன சொல்லுகிறீர்கள் கடவுளே. எனக்கு ஒன்றும் புரியவில்லை?

கண்ணன்- அன்று நான் அரக்கன் நரகாசுரனை எனது சக்ராயுதத்தால் வதம் செய்ததை தீபாவளி என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் இன்று வந்து அதே ஆயுதத்தை நான் பாவித்தால் உடனே சம்பந்தர் அய்யாவும் யாழ் இந்தியதூதரும் அது “வன்முறை” என்று அறிக்கை விடுவார்கள் அல்லவா?

தமிழன்- ஆமாம்! ஆமாம்! இனி நீங்கள் வந்தால் பயங்கரவாதி என்று சிறையில் அடைப்பார்கள். அப்புறம் நீங்கள் உங்கள் வழக்கை விசாரணைக்கு எடுக்கவே பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டி வரும்.

கண்ணன்- போராடும்போது “பயங்கரவாதி” என்பார்கள். நான் செத்த பின்பு “மாவீரர்” என்று புகழ்ந்து மக்களிடம் வோட்டு பெறுவார்கள். உங்கள் தலைவர்கள் பலே கில்லாடிகள்.

தமிழன்- கடவுளே! அப்ப எமக்கு என்னதான் தீர்வு?

கண்ணன்- ஆளவிடுங்கப்பா, நான் விஜய்க்கு 35 அடியில கட்டவுட் கட்ட வேண்டும். “பிகில்” முதல் காட்சி பார்க்க வேண்டும். சிங்கப் பெண்ணே என்று பாட வேண்டும்.

தமிழன்- அடக் கடவுளே! சினிமா மோகம் மேலோகத்திற்கும் வந்துவிட்டதா? அதுசரி அங்கேயும் தமிழ் றொக்கர்ஸ் இருக்குதானே?

நீதி- இனி கண்ணன் ஒருபோதும் வரமாட்டான். ஆனால் அவன் தந்த ஆயுதம் இருக்கிறது. தீர்வு வேண்டும் என்றால் அதை மக்கள் ஏந்த வேண்டும்.


Recommended For You

About the Author: Editor