நாட்டு மக்களின் குறைகளை தீர்க்க மீண்டும் வாய்ப்பு!

ஆட்சி அதிகாரம் கையில் இருந்த போதெல்லாம், நாட்டு மக்கள் குறைகளை தீர்க்காமல் தனது குடும்ப உறவினர்கள் முன்னேற்றம் கருதி செயல்பட்டு வந்த அரசியல்வாதிகள் இன்று மீண்டும் சந்தர்ப்பம் தாருங்கள் மக்கள் குறைகளை நீக்குவோம் என்கிறார்கள்.

இது வேடிக்கையான வாக்குறுதியாக அமைந்துள்ளது என இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி திருமதி அஜந்தா பெரேரா தெரிவித்தார்.

இம்முறை 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒரே ஒரு பெண் வேட்பாளராவார். இவரின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு – 07 விகாரமஹாதேவி திறந்த வெளியரங்கில் மக்கள் உரிமைகள் சம்பந்தமான சட்டத்தரணியும் வினிவிடா இயக்கத் தலைவருமான கலாநிதி நாலந்த கொடிதுவக்கு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே திருமதி அஜந்தா பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இம்முறை ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட முன்வந்துள்ள 35 பேர்களில் 17 பேர்கள் அடுத்த பக்க வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கு முகமாகவே போட்டியிடுகிறார்கள். அத்தோடு தேர்தல் வாக்குச் சீட்டு மிகவும் நீளமாக அமைந்துள்ளது. இவையனைத்தும் பெரிய கட்சிகளின் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையை குறைக்க வேண்டும் என்று பலமுறை குரல் எழுப்பியும் அது நடைமுறை படுத்தப்படவில்லை. அவர்களுக்காக செலவு செய்யப்படும் நிதியில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகைப் பணத்தை மலையக தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்கு செலவிட முடியும்.

நாட்டிற்கு அந்நியச் செலவாணியை பெற்றுத் தரும் தொழிலாளர்கள் அவர்களே. கடந்த 40 ஆண்டு காலமாக தோட்டத் தொழிலாளர்கள் குறைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவோம் என்று கூறி ஜனாதிபதியாக வந்த முன்னாள் ஜனாதிபதிகள் இதுவரை அதை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இலங்கை சோசலிச கட்சியின் அமைப்பாளர்களான சசித சில்வா, ஸ்ரீகுணசிங்க சஜித் ஸ்ரீ தம்மால், சட்டத்தரணி நாலந்த கொடிதுவக்கு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Recommended For You

About the Author: Editor