கோட்டாவிற்கு ஆதரவு தெரிவித்தது ஈரோஸ்!!

ஈரோஸ் அமைப்பின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

ஈரோஸின் ஒரு அணி சஜித்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதுடன், உண்மையான ஈரோஸ் தாமே என அறிவித்திருந்த நிலையில், ஏட்டிக்குப்போட்டியாக இவரும் ஈரோஸிற்கு உரிமை கோரியுள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் உயர்மட்ட உறுப்பினருமான எஸ்.சசிதரனே நேற்று கோட்டாவை ஆதரிப்பதாக அறிவித்தார்.

வவுனியா வாடிவீட்டில் நேற்று (23) மாலை பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபயவை ஆதரிக்கும் தமிழ் கட்சிகள் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1990 ஆம் ஆண்டு ஈரோஸ் கலைக்கப்பட்டதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு சுவிஸ்சில் இருந்து இ.பிரபாகரனும், நோர்வேயில் இருந்து துஸ்யந்தனும் வருகை தந்து ஈழவர் ஜனநாயக கட்சியை தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்து செயற்படுத்தினர். தொடந்து 2015 ஆம் ஆண்டளவில் உட்கட்சி முரண்பாடு காரணமாக இ.பிரபாகரன் பிரிந்து சென்றார். நாங்கள் செயலாளரை மாற்றி தனியாக இயங்கி வந்தோம்.

எம்முடன் இருந்த சிலர் தான் ஈரோஸ் ஜனநாயக முன்னனி என்று செயற்படுகின்றனர். அவர்கள் பதிவு செய்வதற்கு தேர்தல் திணைக்களத்திற்கு கொடுத்துள்ளனர். அவர்கள் தான் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஆனால், நாங்கள் பொதுஜன பெரமுன முன்னனியின் வேட்பாளர் கோட்டாபய அவர்களை ஆதரிக்கின்றோம். போருக்கு பின் சிதைந்து போயுள்ள அபிவிருத்தியை தமிழ் மக்களாகிய நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

நல்லாட்சி அரசாங்கமோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ எதனையும் செய்யவில்லை. முன்னைய ஆட்சிக் காலத்திலேயே பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெற்றன. இதனால் கோட்டாபயவை ஆதரிப்பதன் மூலம் மீண்டும் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும். போரின் போது இருந்த கோட்டாபய சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபட முனைப்பு காட்டுவார். இதன்போது மக்களுக்கு நன்மைகளை செய்வார்.

தமிழ் மக்களின் அரசியல் பலத்தை ஐக்கிய தேசியக் கட்சி நயவஞ்சகமாக சிதைத்து வருகிறது. ஓரளவுக்கேனும் சர்வதேசத்துடன் முரண்படும் கோட்டாபயவை ஆதரவு தெரிவிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

மேலும், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் ஈபிஆர்எல்எப், ஈரோஸ், தமிழர் விடுதலைக் கூட்டனி என்ற கூட்டனியாகத் தான் போட்டியிட்டோம். அதில் எமக்கு வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு ஆசனம் வீதம் இரண்டு ஆசனங்கள் கிடைத்தது. அதில் நாம் தொடர்ந்தும் இருக்கின்றோம்.

வழமைபோல் தற்போதும் தமிழர் விடுதலைக் கூட்டனியுடன் எமது தொடர்பு இருக்கின்றது என்று தெரிவித்தார்.

இதேவேளை, இவர் சார்ந்த குழு ஏற்கனவே கோட்டாபயவை ஆதரிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor