மன்னார் பிரதேச சபை அமர்வில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு!!

தான் நினைத்தவாறே செய்தியை வெளியிடுவேனென ஊடகவியலாளர் தெரிவித்ததாலே மன்னார் பிரதேச சபையின் இருபதாவது அமர்வில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுத்ததாக, மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் அமர்வில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ள அவர் மேலும் தெரிவித்ததாவது.

மன்னார் நகர சபையின் மாதாந்த அமர்வுகளில் சபை தலைவரின் அனுமதியுடனே, ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எவ்வித இடையூறுகளுமின்றி இன்றுவரை ஊடகவியலாளர்கள் மன்னார் நகர சபையின் மாதந்த அமர்வில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த மாதம் மன்னார் நகர சபையின் 19ஆவது அமர்வு இடம் பெற்றது. இதிலும் வழமைபோன்று ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த அமர்வில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றன.

இதில் கலந்து கொண்ட குறித்த மூத்த ஊடகவியலாளர் வாதப்பிரதிவாதங்கள், மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிக்கையிடாது, நகர சபையின் உறுப்பினர் ஒருவர் முன் வைத்த தனிப்பட்ட கருத்துக்களை மாத்திரமே செய்தியாக அறிக்கையிட்டார்.

சபையின் தலைவர் என்ற வகையில் தன்னால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் எவையும் செய்தியாக வௌிவரவில்லை. இது ஊடக தர்மமா? அல்லது நடு நிலை ஊடகச் செயற்பாடா?

இச்செய்தி தொடர்பாக கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மன்னார் நகர சபையின் 20 அமர்வில் வைத்து குறித்த ஊடகவியலாளரை தனிப்பட்ட முறையில் அழைத்து வினவினேன்.

அதற்கு பதில் வழங்கிய அவ்வூடகவியலாளர் ‘நான் நினைத்த படியே செய்தி எழுதுவேன்’ எனப் பிடிவாதமாக தெரிவித்தார். இவரின் இப்பதில் காரணமாகவே மன்னார் நகர சபையின் 20 ஆவது அமர்வில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி மறுத்ததாக மன்னார் நகரசபை தவிசாளர் மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor