தேர்தலில் இனவாதத்தை விற்க முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சி?

தேர்தலில் இனவாதத்தை விற்க முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர். இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்கிறார்களா? அல்லது அரசியல் வியாபாரம் செய்கிறார்களா? என்று மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை பிராந்திய முக்கியஸ்தர் அஹமட் புர்கான் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை இன்று (24) தலைமைக் காரியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த மேல் மாகாண ஆளுநர், எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த நாட்டின் எதிர்காலத்திற்கும் விசேடமாக முஸ்லிம் மக்களுக்கு மிக முக்கியம் வாய்ந்த தேர்தலாகவே நான் கருதுகிறேன்.

பிரதானமாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரமதாச ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்த 2 பேரில் யார் இந்த நாட்டை சரியாக கொண்டு செல்லக் கூடியவர் என்பதை நாம் உணர்ந்து தெரிவு செய்ய வேண்டும்.

இந்த ஆட்சியில் முஸ்லிம் மக்கள் மீது இனவாத கருத்துக்களும் பல்வேறு தாக்குதல்களும் திட்டமிடப்பட்டு நடந்தேரியது. இவ்வகையான தாக்குதல்களை கண்டித்து முஸ்லிம் மக்களுக்காக பாராளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது பாராளுமன்றத்திற்கு வெளியே என்றாலும் ஒரு வார்த்தை கூட பேசாதவர் தான் இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.

வட கிழக்கில் அபிவிருத்தியை செய்தது கடந்த ஆட்சியிலாகும். முஸ்லிங்களை வடக்கில் மீள்குடியேற்றம் செய்தது மாத்திரமல்லாமல் நான் கொழும்பு மேயராக இருந்த கால கட்டத்தில் கொழும்பு நகரை ஓர் முதல் தர நகராக மாற்ற கோட்டாபய ராஜபக்ஷ எனக்கு உதவினார்.

மேலும் அக்காலத்தில் ஜாதி, இனம் பாராமல் எல்லா மக்களையும் கொழும்பில் வாழ எல்லோருக்கும் சமமான நிலையை ஏற்படுத்தினார்.

கோட்டபய ராஜபக்ஷ இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவார். நாட்டின் சுதந்திரம் மற்றும் அபிவிருத்தி பொருளாதாரம் ஆகியவற்றை முன்னேற்றுவார். ஆகவே, இந்த தேர்தலில் யாரை தெரிவு செய்வது என்பது மிக இலேசான விடயமாகும்.

இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ நிச்சயமாக ஜனாதிபதியாகுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளர்களாக வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Recommended For You

About the Author: Editor