உயர் நீதிமன்றத்தின் சட்டஅமுலாக்க வழிகாட்டுதல்கள்!!

அதிகரித்து வரும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு பதில் நடவடிக்கையாக உயர் நீதிமன்றம் விடுத்துள்ள ஒரு முக்கிய தீர்ப்பில், பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் சட்டத்தை அமுல்படுத்துகின்ற அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய 20 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டில் பொலிஸாரினால் மகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக தரம் 10 ஐச் சேர்ந்த மாணவியொருவரின் தாயாரால் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளை தொடர்ந்து தீர்ப்பு வழங்கியபோதே உயர் நீதிமன்றம் இந்த வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.

பதின்ம வயது பெண்ணை சட்ட ரீதியற்ற வகையில் கைது செய்தமை, அவரின் சுதந்திரத்தை இழக்கச் செய்தல், ஒரு நீதவானின் முன் அவரை ஆஜர்படுத்தாமல் நியாயமற்ற வகையில் தடுப்புக் காவலில் வைத்தமை, அக்குரெஸ்ஸ பிரதேச சபை தலைவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தவறான வாக்குமூலம் பெற்றுக் கொள்ள முயற்சித்தமை, குறித்த மாணவி வாக்குமூலம் வழங்க மறுத்தநிலையில் மாணவிக்கு களங்கம் ஏற்படும் வகையில் சிகிச்சைக்கு உட்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டுக்கள் மாத்தறை பொலிஸ் நிலையத்தின் தலைமை ஆய்வாளர் வருணி பொகஹவத்தவே என்பவருக்கு எதிராகவே சுமத்தப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தில் குறித்த மனு மீதான விசாரணை இடம்பெற்று வந்தது.

புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் கே மலல்கொட உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பினை வழங்கியுள்ள நீதிபதிகள், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நஷ்ட ஈடாக சம்மந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியினால் 100,000.00 ரூபாய் வழங்கப்பட்ட வேண்டும் எனவும் அரசாங்கம் 50,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சட்டத்தை அமுல்படுத்துகின்ற தரப்புகளின் செயற்பாடுகள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பல்வேறு முறைப்பாடுகள் வெளியாகின்ற நிலையில் இந்த வழக்கை ஒரு சந்தரப்பமாக கருதி நீதியரசர்களினால் பொலிஸ் மா அதிபருக்கு பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் அரசியலமைப்பு உட்பட சட்டங்களினால் பொது மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் இலங்கையின் சட்டம், சர்வதேச விதிமுறைகள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளில் உள்ள சட்டப் பாதுகாப்புகளை பிரதிபலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

(01). சட்ட அமுலாக்க அதிகாரிகள் அனைத்து மக்களினதும் கௌரவத்தை பாதுகாத்தல், மனிதவுரிமைகளை நிலைநிறுத்தல் வேண்டும்.

(02). சட்ட அமுலாக்க அதிகாரிகள் சட்டபூர்வமான கொள்கைகளை அத்தியாவசியமாகவும், பாகுபாடு இன்றி மனிதநேய அடிப்படையிலும் மதிக்க வேண்டும்,

(03). எந்தவிதமான பாகுபாடுகளோ வேறுபாடுகளோ அற்ற வகையில் எந்த தருணத்திலும் சட்ட அமுலாக்க அதிகாரிகள் ‘சட்டத்தை’ விரிவுபடுத்துவதுடன் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன்னிலையில் சமனானவர்கள் – சம உரிமையுள்ளவர்கள். பாகுபாடு இல்லாமல் எனவே, சட்டத்தின் சமனிலையான பாதுகாப்பை அனைவரும் பெறவேண்டும்

(04). இனம், மதம், மொழி, நிறம், அரசியல் நிலைப்பாடு, வம்சாவளி, சொத்துகள், பிறப்பு மற்றும் ஏனைய தரநிலைகள் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது.

(05). பெண்களின் சிறப்பு நிலை மற்றும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சில சிறப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துவதை பாரபட்சமானதாக கருதக்கூடாது (குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்), சிறுவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் பலர் சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு ஏற்ப சிறப்பு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

(06). பெரியவர்களை விட சிறார்கள் அனைத்து மனிதவுரிமை விடயங்களிலும் முழுமையான நன்மைகளை பெறவேண்டும். அத்துடன் சிறார்கள்
அவர்களுக்குரிய மனநிலையில் கையாளப்பட வேண்டும். அத்துடன் கண்ணியம் மற்றும் கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும்.

(07). சிறுவர்களைக் தடுத்துவைத்தல் அல்லது சிறைப்பிடித்தல் என்பது உச்ச கட்ட நடவடிக்கையாகும்.

(08). சிறார்கள் வயது வந்தவர்களிடத்தில் வேறுபடுத்தி தடுத்து வைக்கப்பட வேண்டும்.

(09). அதேவேளை, தடுத்து வைக்கப்பட்ட சிறார்களை காண்பதற்கோ, தொடர்பு கொள்வதற்கோ குடும்ப உறுப்பினர்களுக்கு உரிமையுள்ளது.

(10). பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறைச் செயற்பாடுகளும், பொது அதிகாரிகள் அல்லது தனி நபர்களால், வீட்டிலோ, சமூகத்திலோ, அல்லது உத்தியோகபூர்வ நிறுவனங்களிலோ செய்யப்படுத்தப்படுகின்றதா என்பதை அறிந்து அதனை தடுக்க, விசாரிக்க மற்றும் கைது செய்ய சட்ட அமுலாக்க அதிகாரிகள் உரிய முனைப்புடன் செயல்படவேண்டும்.

(11). சட்ட அமுலாக்க அதிகாரிகள் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க கடுமையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் பொலிஸாரின் தவறுகளின் விளைவாக மீண்டும் பாதிப்புகள் ஏற்படாது என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

(12). கைதுசெய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படமாட்டாது மற்றும் அனைத்து விதமான வன்முறை அல்லது சுரண்டல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

(13). சட்ட அமுலாக்க அதிகாரிகள் எந்தவொரு சூழ்நிலையிலும் சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது சீரழிவான நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது

(14). எந்தவொரு தனி மனிதரும் அவரது மரியாதை அல்லது கௌரவத்தின் அடிப்படையில் சட்டவிரோதமான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட கூடாது.

(15). சட்ட அமுலாக்க அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சிகளையும் கருணையுடனும் கவனத்துடனும் நடத்த வேண்டும்.

(16). கைது செய்யப்பட்ட தரப்பினருக்கு கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் பற்றி சட்ட அமுலாக்க அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

(17). சட்ட அமுலாக்க அதிகாரிகள் ஒவ்வொரு கைதுக்கும் சரியான பதிவை பராமரிக்க வேண்டும். அந்த பதிவுகளில் கைதுக்கான காரணம், நேரம், கைது செய்யப்பட்ட தரப்பினர் பறிமாற்றப்பட்ட மற்றும் தடுத்துவைக்கப்பட்ட இடங்கள், நீதிமன்றில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட நேரம், கைது நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளின் விபரங்கள், காவலில் வைக்கப்பட்ட இடம் குறித்த துல்லியமான தகவல்கள் மற்றும் விசாரணையின் விவரங்கள் என்பன உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

(18). கைதுசெய்யப்பட்டவர் யாராக இருப்பினும், அவரது கைது அல்லது தடுப்புக்காவலின் சட்டபூர்வமான தன்மை தாமதமின்றி மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக நீதித்துறை அதிகாரத்தின் முன் ஆஜராக உரிமை உள்ளது.

(19). வயதுவந்தோரிடமிருந்து சிறார்களை வேறுபடுத்தி தடுத்து வைக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் முடிந்தவரை அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும். ஆண்களிடமிருந்து பெண்கள் மற்றும் தண்டனை பெற்ற நபர்களிடமிருந்து தண்டிக்கப்படாத நபர்கள் வேறுபடுத்தப்பட வேண்டும்.

(20). சட்ட அமுலாக்க அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் நாட்டின் சட்டத்தையும் இந்த விதிகளையும் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.


Recommended For You

About the Author: Editor