இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் முயற்சி தோல்வி!!

தம்மால் ஆட்சி அமைக்க முடியவில்லை என அறிவித்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அந்த வாய்ப்பை எதிர்க் கட்சியினருக்கு வழங்கியுள்ளார்.

கடந்த ஒரு தசாப்தமாக ஆட்சியில் இருந்த நெதன்யாகு, செப்டெம்பரில் நடந்த தேர்தலுக்கு பின் கூட்டணி அரசொன்றை அமைப்பதில் தோல்வியை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் அரசொன்றை அமைப்பதற்கு நெதன்யாகுவின் போட்டியாளரான நீலம் மற்றும் வெள்ளை கட்சியின் பென்னி காட்ஸ் அழைக்கப்படவுள்ளார்.

காட்ஸையும் தனது கூட்டணி அரசுக்குள் இணைப்பதற்கு நெதன்யாகு முயன்றபோதும் அது தோல்வி அடைந்தது.

தனது முயற்சியை கைவிட்ட நெதன்யாகு, ஆட்சி அமைப்பதற்கு தாம் தொடர்ச்சியாக முயன்றபோதும் அது நிராகரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பென்னி காட்ஸை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வர நான் அனைத்து முயற்சிகளையும் செய்தேன், பரந்த ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்தேன், மற்றொரு தேர்தலை தடுப்பதற்கான அனைத்து முயற்களையும் மேற்கொண்டேன். துரதிருஷ்டவசமாக எல்லா நேரத்திலும் அவர் நிராகரித்துவிட்டார்” என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.

இதேபோன்ற பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு காட்ஸுக்கு 28 நாட்கள் வழங்கப்படும் என்று இஸ்ரேல் ஜனாதிபதி ரியுவன் ரிவ்லின் குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய அரபு எம்.பிக்கள் காட்ஸுக்கு ஆதரவை வெளியிட்டபோதும் 120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடமாக 61 ஆசனங்களை பெறுவதற்கு காட்ஸுக்கு ஒரு டஜனுக்கு மேட்பட்ட அசனங்கள் தேவைப்படுகின்றன.

இஸ்ரேலில் இந்த ஆண்டில் ஏற்கனவே இரண்டு பொதுத் தேர்தல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் மற்றொரு தேர்தலை தவிர்ப்பதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி ரிவ்லின் குறிப்பிட்டுள்ளார். இதில் காட்ஸும் ஆட்சி அமைக்க தவிறனால் மற்றொரு தேர்தலை தவிர்ப்பதற்கு மூன்றாவது ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.

கடந்த செப்டெம்ரில் நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 32 ஆசனங்களையும் காட்ஸின் நீலம் மற்றும் வெள்ளை கட்சி 33 ஆசனங்களையும் வென்றன. ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் நெதன்யாகுவுக்கு அதற்கான முதல் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி வழங்கி இருந்தார்.

நெதன்யாகுவின் அறிவிப்புக்கு பதிலளித்த நீலம் மற்றும் வெள்ளை கட்சி “சுழல்வதற்கான காலம் முடிந்துவிட்டது இது செயற்பாட்டுக்கான காலம்” என்று குறிப்பிட்டுள்ளது.

எனினும் மூன்றாவது பொதுத் தேர்தல் ஒன்றின் மூலமே இந்த இழுபறியை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று பெரும்பாலான இஸ்ரேலியர்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor