பிரெக்சிட் ஒப்பந்தம்..! பிரித்தானிய எம்.பி.க்கள் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரக்ஸிட் ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேவேளையில் அதனை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் குறித்த பிரதமரின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

வரும் 31ம் தேதிக்குள் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி வருகிறார்.

கடந்த சனிக்கிழமை பிரெக்ஸிட் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ஒப்பந்தம் குறித்த முடிவைத் தாமதப்படுத்த வேண்டும் என்று கூறி எம்பிக்கள் வாக்களித்தனர்.

எனினும், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட்டுக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இருப்பதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 329 வாக்குகளும், எதிராக 299 வாக்குகளும் விழுந்தன. எனினும், ஒப்பந்தம் மீதான விவாதத்தை இந்த வார இறுதிக்குள் நிறைவு செய்யும் பிரதமரின் தீர்மானத்தை எம்.பி.க்கள் நிராகரித்தனர்.

விரிவான விவாதம் இல்லாமல் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக அவர் மீது எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்றுவதற்கான தீர்மானம் தோல்வி கண்டிருப்பது, போரிஸ் ஜான்சனுக்கு புதிய பின்னடைவாக கருதப்படுகிறது.

முன்னதாக, தனது திட்டத்தை எம்.பி.க்கள் ஏற்காவிட்டால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இடைக்காலத் தேர்தல் நடத்தப் போவதாக அவர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor