‘த ஹன்ரட்’ கிரிக்கெட் தொடரில் விளையாடும் 24 இலங்கை வீரர்கள்!

இங்கிலாந்தில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள 100 பந்துகள் கொண்ட ‘த ஹன்ரட்’ கிரிக்கெட் தொடருக்கு, 24 இலங்கை வீரர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், ஏலத்தில் பங்கெடுக்க இலங்கையினை சேர்ந்த 24 கிரிக்கெட் வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வீரர்கள் ஏலத்தில் அதிக அடிப்படை விலையில், பங்கெடுக்கும் இலங்கை வீரராக நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க காணப்படுகின்றார். அந்த வகையில், லசித் மாலிங்கவின் அடிப்படை விலையாக 125,000 யூரோக்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, இலங்கை அணிக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தலைவராக செயற்படும் திமுத் கருணாரத்ன, அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா ஆகிய வீரர்களுக்கு அடிப்படை விலையாக 75,000 யூரோக்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

லஹிரு திரிமான்ன, அஞ்சலோ மெத்திவ்ஸ், தனஜய டி சில்வா மற்றும் இசுரு உதான ஆகியோருக்கான அடிப்படை விலையாக 50,000 யூரோக்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்னாந்து, தனுஷ்க குணத்திலக்க, சுரங்க லக்மால், குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க, திசர பெரேரா, நுவான் பிரதீப் மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோருக்கு அடிப்படை விலையாக 40,000 யூரோக்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர இலங்கையை சேர்ந்த வனிந்து ஹஸரங்க, லஹிரு குமார, ஜீவன் மெண்டிஸ், கசுன் ராஜித, சீக்குகே பிரசன்ன, ரமித் ரம்புக்வெல மற்றும் உபுல் தரங்க ஆகியோர் த ஹன்ரட் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கின்ற போதிலும், இவர்களது அடிப்படை விலைகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100 பந்துகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடருக்கு த ஹன்ரட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

த ஹன்ரட் தொடரில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு வீரர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படும் என அண்மையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

இந்நிலையில் கிறிஸ் கெய்ல், ரஷித் கான், டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச், பாபர் அசாம் உள்ளிட்ட 165 பேர் இத்தொடரில் விளையாடுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி விண்ணப்பம் செய்துள்ள வீரர்கள் அடங்கிய முழுப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் என பங்கேற்கும் இத்தொடர், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில், இங்கிலாந்தின் பிராந்தியங்களைச் சேர்ந்த எட்டு அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.

இந்த த ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும் என முன்னர் கூறப்பட்ட போதும் இந்த ஆண்டு அதில் சில மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.

அந்தவகையில் இந்த கிரிக்கெட் தொடரில் 10 பந்துகள் கொண்ட 10 ஓவர்கள் வீசப்படவுள்ளதோடு, குறிப்பிட்ட ஒவ்வொரு ஓவரினதும் 10 பந்துகளையோ அல்லது 5 பந்துகளையோ பந்துவீச்சாளர் ஒருவருக்கு வீச முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த கிரிக்கெட் தொடரில் இன்னும் சில புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தவுள்ளது. இத்தொடர் நெருங்கும் போது இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது


Recommended For You

About the Author: Editor