ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை இன்று நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் போன்று மீண்டும் இடம்பெறாதிருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவை தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்று(புதன்கிழமை) இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தாக்குதல்கள் குறித்து ஆராயும் விசேட நாடாளுமன்றக் குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை 200 பக்கங்களைக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் ஊடாக அரசியல்வாதிகள் சிலருக்கும், அதிகாரிகள் சிலருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் ஊடக அறிக்கைகளில் எந்தவித உண்மையும் இல்லையென்று பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காக இந்த விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்களுக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை நாடாளுமன்றத்தினால் பரிந்துரைக்க முடியாது. நீதிமன்றத்துக்கே இதற்கான அதிகாரம் உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த நிலையில் பலர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்