வைரஸ்: ஏற்படுத்தும் படம்!

தமிழ் சினிமாவில் இம்மாதிரியான படம் சாத்தியமா என்று கேட்டீர்களானால் ரொம்பவே யோசித்தாலும் இப்போதைக்குச் சாத்தியமே இல்லை.

அப்படியே சாத்தியப்பட்டாலும் பெரும் இயக்குநர்கள் படங்களில் நடக்கலாம். அப்படி அமையும்போது, வியாபாரம், கந்தாயங்கள் எல்லாம் முன்வைத்து அது ஒரு கமர்ஷியல் படமாய் வெளிவருமே தவிர தரமான படமாய் அமையுமா என்பது பெரும் கேள்விக்குறி.

இந்த வாரம் பார்த்த இரண்டு படங்கள் மனித குலம் சந்தித்த பேரழிவுகளைப் பற்றியது. ஒன்று சொர்னோபில், இன்னொன்று வைரஸ்.

டொவினோ தாமஸ், பார்வதி, குஞ்சாக்கோ போபன், ரம்யா நம்பீசன், ரேவதி, மனோடா செபாஸ்டின், ரீமா கல்லிங்கல், ஜிஜு ஜோர்ஜ், ஷொபீன் சாஜிர் என பெரிய நட்சத்திரப் பட்டாளம்; ஆஷிக் அபுவின் இயக்கம்; ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு என மலையாளப் பட முன்னணிகள் எல்லோரும் சேர்ந்து எடுத்திருக்கும் படம் வைரஸ்.

சென்ற ஆண்டு கேரளாவில் நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டு நடந்தேறிய சம்பவங்கள், அந்த நோய் எப்படி தடுக்கப்பட்டது, அதன் பின்னால் உள்ள அரசியல், பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினை, அதனுள்ளான காதல், அன்பு, ஏமாற்றம், நட்பு, துரோகம் எனப் பல விஷயங்களை மிக அழகாய்த் தொகுத்தளித்திருக்கிறார்கள்.

எழுந்து நின்று கைதட்ட வைக்கும் செயலைச் செய்திருக்கிறார்கள். இப்படம் வெளிவருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார்கள். படத்தின் ஆரம்பக் காட்சியில் அரசு ஆஸ்பத்திரி செயல்படும் விதம், அதன் பின்னணி, அதனுள் நடக்கும் பிரச்சினைகள், அதன் பரபரப்பு என அத்தனையும் துல்லியமாக எழுதப்பட்டு, எடிட் செய்யப்பட்டு, நடிக்க வைக்கப்பட்ட காட்சிகள் நம் கண்முன்னே அற்புதமாக உயிர் பெறுகின்றன.

அந்தக் காட்சி கொடுக்கும் பாதிப்பிலிருந்து விலகும் முன்பே வைரஸ் தாக்கி உள்ளே வரும் நோயாளி, அவனுக்கான சிகிச்சை, அவனுக்கு வந்திருக்கும் வியாதியைக் கண்டறிய முடியாத குழப்பம் என நோய் தொடர்பான பிரச்சினைகளும் அதனதன் பரபரப்பினூடே கண் முன்னே விவரிக்கப்படுகின்றன.

நம்முள் பதற்றம் தொற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறது. அந்தப் பதற்றம் மெல்லப் பதைபதைப்பாக மாறி பயத்தைக் கொடுக்கிறது. ஒரு வைரஸ் வந்துவிட்டது. அதற்கு மருந்தில்லை. ஆனால், அதைத் தடுக்க வேண்டும்.

எப்படி? அதற்கான விசாரணைகள், அந்த விஷயத்தை அரசியலாய்ப் பார்க்கும் குழு, அதையும் தன் சொந்த முயற்சியில் கண்டுபிடிக்கும் டாக்டர் பார்வதி, வைரஸ் பாதிப்பு பெற்றவர்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கப் போய் வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட நர்ஸ் தனக்கு வந்திருப்பது சாதாரணமானது அல்ல என்று அத்தனை உடல் உபாதைகளோடு வெளிப்படுத்த விழையும் மனிதம், நிபா வைரஸ் பிணத்தை எந்த மத சாங்கியமும் செய்யாமல் எரிக்கும் பிரச்சினை.

அதன் பின்னணியில் உள்ள W.H.O சட்டத்திட்டங்கள்… எப்படி பாதிப்பு உண்டானது, தொற்று ஏற்பட்ட விதம், அது தொடர்ந்து பரவாமல் இருப்பதற்கான முயற்சிகள் எனப் பரபரப்புக்கும் மனதை உருக்கும் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாத திரைக்கதை.

ஒரு பிரச்சினை உருவாகிவிட்டது. அதை மேலும் பிரச்சினையாக்காமல் தடுக்க வேண்டும். அதே நேரத்தில் பிரச்சினை உருவான விதத்தைக் கண்டுபிடித்து அதை முளையிலேயே கிள்ள வேண்டும்.

இத்தனையும் செய்து முடிக்க, பதற்றமில்லாத மனநிலையும் பெரியதொரு நெருக்கடியைச் சமாளிக்கும் தைரியமும் திறமையான அறிவும் வேண்டும். அத்தனையும் திரையில் நம் கண் முன் விரிகின்றன.

எல்லாமே நம்பகத்தன்மையுடன் பதிவாகின்றன. படம் பார்த்து முடிக்கும்போது இத்தனை காரியங்களைச் செய்த நிஜக் குழுவினருக்கு ஒரு சல்யூட் அடிக்க வேண்டும் போலிருந்தது.

எல்லாவற்றையும் மீறி பேரழிவுத் தாக்குதல்கள், வியாதிகள் எனக் கூட்டம் கூட்டமாக மக்கள் மடியக் காரணமான விஷயங்கள் எத்தனை வந்தாலும் எழுந்து பிழைத்து நிற்கும் மனிதர்கள்தாம் வாழ்க்கையின் நம்பிக்கையாகக் கண்முன் தெரிகிறார்கள். வைரஸ், பார்க்க வேண்டிய படம்.


Recommended For You

About the Author: Editor