விக்கிரவாண்டி 84, நாங்குநேரி 66 சதவீதம் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ்நாராயணன் ஆகியோர் உள்பட மொத்தம் 23 பேர் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வன் (அ.தி.மு.க.), புகழேந்தி (தி.மு.க.), கந்தசாமி (நாம் தமிழர் கட்சி) உள்பட 12 பேர் களத்தில் உள்ளனர்.

பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் போட்டியிட்டாலும், நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையேயும், விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையேயும்தான் கடும் போட்டி நிலவியது.

இரு தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையிலேயே மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப் போட்டனர். தொடக் கத்தில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தபோதிலும் நேரம் செல்லச் செல்ல ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது. இளம் வாக்காளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வந்து ஓட்டுப் போட்டனர்.

இரு தொகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

நாங்குநேரி தொகுதியில் 66.35 சதவீத வாக்குகள் பதிவாயின. விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

நாங்குநேரி தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 57 ஆயிரத்து 418 வாக்காளர் கள் ஓட்டுப்போடுவதற்காக 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

வடுகச்சிமதில், மூலைக்கரைப்பட்டி, ரெட்டியார்பட்டி, பர்கிட்மாநகரம், ஏர்வாடி, பரப்பாடி உள்ளிட்ட பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர். முதியவர்கள் சிலர் பிறர் உதவியுடன் வந்து ஓட்டுப் போட்டனர்.

சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதை தொழில்நுட்ப நிபுணர்கள் சரிசெய்த பின்னர் அங்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது. நாங்குநேரி வடுகச்சிமதில் பகுதியில் உள்ள 91 மற்றும் 92-வது எண் வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்தன. அதில் 92-வது எண் வாக்குச்சாவடியில் பழுதை உடனடியாக சரி செய்து விட்டனர்.

91-வது எண் வாக்குச்சாவடியில் பழுதை சரிசெய்ய முடியாததால் மாற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அங்கு முதலாவது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரத்தில் 2 பேர் ஓட்டு போட்டு இருந்ததால், அவர் களை மீண்டும் அழைத்து வந்து பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்கை பதிவு செய்ய வைத்தனர்.

ஏர்வாடியில் பெண்களுக்கான ஒரு வாக்குச்சாவடியில் யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்பதை காண்பிக்கும் எந்திரம் பழுதடைந்தது. அதை தொழில்நுட்ப நிபுணர் கள் சரிசெய்தனர். ஏர்வாடியில் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் குடை பிடித்தபடி வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தனது சொந்த ஊரான ரெட்டியார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது மனைவி பாலசெல்வி, மகள் நாராயண பிரியதர்ஷினி ஆகியோருடன் வந்து ஓட்டுப் போட்டார்.

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர், பர்கிட் மாநகர், ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

பள்ளர், காலாடி, பண்ணாடி, தேவேந்திரகுலத்தான், குடும்பன், கடையன், வாதிரியார் ஆகிய சமூகத்தினரை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தேர்தலை புறக்கணித்து தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக பெருமாள்நகர், கல்லத்தி, அரியகுளம், கடம்பன்குளம், சிங்கநேரி, இடும்பன், கடம்பன் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஓட்டுப்போட மக்கள் செல்லாததால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 23 ஆயிரத்து 387 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 275 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

காலையிலேயே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்த போதிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர்.

தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே மின்னணு எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. அதை சரிசெய்ய முடியாததால் மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு காலை 7.35 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

இதேபோல் சோழம்பூண்டி, சங்கீதமங்கலம், சிந்தாமணி, விக்கிரவாண்டி, குண்டலப்புலியூர், சோழகனூர், வெங்கமூர், மதுரப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்ட பின் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. சில இடங்களில் பழுதான எந்திரங்களுக்கு பதிலாக மாற்று எந்திரங்கள் பொருத்தப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவின் போது, அ.தி.மு.க., தி.மு.க.வைச் சேர்ந்த வெளியூர்காரர்கள் சிலர், தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச்செல்லாமல் தொகுதியிலேயே முகாமிட்டிருந்தனர். இவர்கள் நேற்று சில வாக்குச்சாவடி மையங்களுக்கு அருகில் வலம் வந்தபடி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர். இதனால் இரு கட்சியினரிடையே ஆங்காங்கே தகராறு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல முயன்ற ஒருவரை அங்கு நின்றிருந்த தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி அவரிடம் பூத் சிலிப்பை கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.காரர் என்று தெரியவந்தது. அவர் கள்ள ஓட்டு போட வந்திருக்கலாம் என கருதி, தி.மு.க.வினர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையறிந்த, அவருடன் வந்த சிலரும் அங்கிருந்து காரில் ஏறி சென்று விட்டனர்.

விக்கிரவாண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் தி.மு.க.வினர் சாமியானா பந்தல் அமைத்து இருந்தனர். இந்த பந்தலை அகற்றும்படி போலீசார் கூறியதால் அவர்களுடன் தி.மு.க. வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

விக்கிரவாண்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி அருகில் சுற்றித் திரிந்த வெளியூர்க்காரரை அ.தி.மு.க. நகர செயலாளர் பூர்ணராவ் தட்டிக்கேட்டார். அப்போது அங்கு வந்த தி.மு.க.வினர் அந்த நபருக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

நாங்குநேரி தொகுதியில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் ‘சீல்’ வைக்கப்பட்டு, ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் ஏற்றி, வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு ஒரு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

இதேபோல் விக்கிரவாண்டி தொகுதியிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் இ.எஸ்.பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இரு மையங்களுக்கும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டசபை தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு 69.44 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த தொகுதியின் வாக்குகளும் 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் 81.71 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் இந்த இடைத்தேர்தலில் அதை விட அதிகமாக 84.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இதேபோல் சட்டசபை தேர்தலின் போது நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் 71.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 66.35 சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளன. இடைத்தேர்தலில் இந்த தொகுதியில் வாக்குப்பதிவு குறைந்து இருக்கிறது.


Recommended For You

About the Author: Editor